நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…! வாக்காளர்கள் ஆர்வம்…

சென்னை: மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 30,735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 5மணி முதல் 6மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு 57,600 க்கும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  தேர்தலில் சுமார் 2கோடியே 79லட்சத்து 56ஆயிரம் பேர்  வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர்.

வாக்குப்பதிவை தொடர்ந்து,  வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. பின்னர், தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் 218 பதவிகளுக்கு ஏற்கனவே, போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8வது வார்டில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதவிர காஞ்சிபுரம் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தொடர்புடைய வார்டுகளில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது.

வாக்குச்சாவடி சீட்டு  இல்லாத வாக்காளர்கள்,  வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர்உரிமம் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஒன்றை காட்டியும் வாக்களிக்கலாம். மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்தளம், சக்கரநாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவை முன்னிட்டு 1 லட்சம்  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22-ம்தேதி எண்ணப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.