இலங்கையில் வாகன பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி!



இலங்கையில் வாகன பாவனையாளர்களுக்கு ஏற்படவுள்ள கடுமையான நெருக்கடி குறித்து இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கவலை தெரிவித்துள்ளது.

உதிரி பாகங்களை முன்பதிவு செய்வது தொடர்பான கடன் பத்திர வசதிகளை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள அந்த சங்கம், வங்கிகளின் இந்த உத்தியோகபூர்வமற்ற கட்டுப்பாடுகள் வாகன பராமரிப்பை முடக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

“இந்த கட்டுப்பாடுகள் பொருட்கள், மக்கள் போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

போக்குவரத்துத் துறை நிறுத்தப்பட்டால், அது நாட்டின் முக்கிய வருவாய் மூலங்களான ஏற்றுமதி மற்றும் சுற்றுலாதுறை போன்றவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்”என்று அந்த சங்கம் எச்சரித்தது.

பல வாகன உரிமையாளர்கள் ஆபத்தான, போலி உதிரி பாகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு குப்பைக் கிடங்குகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இது வாகனப் பாவனையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் மற்றும் கடன் பத்திர தாமதங்கள், வாகன சந்தை முழுவதும் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஆபத்தை ஏற்படுத்துவதுடன், உதிரி பாகங்களின் விநியோகம் அல்லது விலையை கணிக்க இயலாமைக்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், வாகனத் தொழிற்துறையின் அவல நிலை குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாகன உதிரி பாகங்களை அத்தியாவசியப் பொருட்களின் வகையாக அடையாளப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.