1. அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்
இதற்குமேல் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்ற எண்ணம் எந்த வயதிலும் வரக்கூடாது. பல்துறை வித்தகராக இருப்பது பயனளிக்கக்கூடிய ஒன்று. கோப்பர்நிகஸ் ஒரு கணிதவியலாளர், வானியலாளர், சட்ட நிபுணர், வழக்கறிஞர், நான்கு மொழிகளில் வெகு சிறப்பாக அறிந்தவர், அரசு தூதர், பொருளியலாளர். போதுமா?!
2. பிரபஞ்சம் நம்மைச் சுற்றியது அல்ல
நம்மில் பலரும் எப்போதும் நம்மை மையமாக வைத்துதான் சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். ஆனால் அப்படி நடந்து கொண்டால் தனித்து விடப்படுவோம். கோப்பர்நிகஸ் வானியலில் அழுத்தமாகக் கூறியதும் இதைத்தான். பூமியின் மையம் பிரபஞ்சத்தின் மையம் அல்ல. அது புவியீர்ப்பு மையம், சந்திரனின் சுழற்சி பாதையின் மையம், அவ்வளவுதான்.
3. மாற்றி யோசித்தால் அற்புதங்கள் விளையலாம்
காலங்காலமாக யோசிக்கும் பாதையிலேயே நாமும் யோசித்துக் கொண்டிருந்தால் எந்த முன்னேற்றமும் நடைபெறாது. எந்தக் கண்டுபிடிப்பும் உருவாகாது. கோப்பர்நிகஸ் வாழ்ந்த காலத்தில் தாலமியின் கொள்கைதான் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. சூரியனும் கோள்களும் பூமியைச் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் சூரியனைச் சுற்றிதான் பூமி உட்பட கோள்கள் சுற்றி வருகின்றன என்பதை கோப்பர்நிகஸ் முன்வைக்க, அதன்பின் வானியலில் பல முன்னேற்றங்கள் நடைபெறத் தொடங்கின.
4. ஆவணப்படுத்துங்கள்
நமக்கு புதிய சிந்தனைகள் தோன்றலாம். ஒருவேளை அவற்றைத் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாமலும் போகலாம். எதையும் சிந்தனையோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றை எழுத்தில் அல்லது கணினியில் சேமித்து வையுங்கள். வருங்காலத்தில் இது பயன்படும். கொஞ்சம் தாமதமாகச் செய்தார் என்றாலும் கோப்பர்நிக்கஸ் தன் கருத்துகளை நூலாக உருவாக்கினார்.
5. ஒன்றை ஒட்டுமொத்தமாக ஆதரிக்க வேண்டியது என்பது இல்லை.
பெரும்பாலான கோட்பாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை, புறம் தள்ள வேண்டியவை என்று இரு பகுதிகளும் இருக்கும். ஒரு கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட காரணத்தால் அதை ஒட்டுமொத்தமாக ஆதரிக்க வேண்டும் என்பது இல்லை. கோப்பர்நிகஸ் கத்தோலிக்க மதகுருவாக இருந்தவர். என்றாலும் மதக் கொள்கைகளுக்கு எதிரான சூரிய மையக் கொள்கையை அவர் அழுத்தமாக முன்வைத்தார்.
6. நம்பிக்கை என்பது ஆத்மார்த்தமாக இருக்கட்டும்
இறுதிக் காலத்தில் கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கத்தில் இருந்தார் கோப்பர்நிகஸ். தனது நூல் அச்சிடப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் அது வெளிவருவதற்குள் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் அந்த நூல் அச்சிடப்பட்டு அதன் ஒரு பிரதி அவரது கைகளில் வைக்கப்பட்டது. உடனே அவர் தனது ஆழ்மயக்க நிலையில் இருந்து மீண்டு விழிப்புணர்வு பெற்று அந்த நூலைப் புரட்டிப் பார்த்த பிறகுதான் இறந்தாராம்.