பெங்களூரு :
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி-கல்லூரிகளுக்கு வருவது புதியது அல்ல. யாருக்கும் கல்வி கிடைப்பது மறுக்கப்படக்கூடாது. ஐகோர்ட்டு தனது உத்தரவில் கல்லூரி வளர்ச்சி குழுக்கள் நிர்ணயித்துள்ள சீருடை இருக்கும் கல்லூரிகளுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை, ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு தனது துறையின் கீழ் இயங்கும் அனைத்து உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் மவுலானா ஆசாத் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரிகளில் பள்ளி நல சங்கங்கள் இல்லை. அத்தகைய நல சங்கங்கள் இருக்கும் பள்ளி-கல்லூரிகளுக்கு மட்டுமே இடைக்கால உத்தரவு பொருந்தும். அதனால் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவு, ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவுக்கு எதிரானது.
நாங்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து, ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு குறித்தும், சிறுபான்மையினர் நலத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு குறித்தும் எடுத்து கூறினோம். இந்த குழப்பத்திற்கு தீர்வு காணுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். மதசார்பின்மை கொள்கையில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி கிடைப்பதை தடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி என்ன சொல்ல போகிறார். ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் உள்ள அனைத்து அமைப்புகளையும் நான் கண்டிக்கிறேன். அது ஆர்.எஸ்.எஸ்., எஸ்.டி.பி.ஐ., பஜ்ரங்தள் என எந்த அமைப்பாக இருந்தாலும் சரி. அவர்களின் செயல் ஏற்கக்கூடியது அல்ல. கல்வி நிலையங்களில் போலீசாரின் பணி என்ன?. போலீஸ் மூலம் மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இது ஜனநாயகமா?.
இந்த பிரச்சினையை தொடக்கத்திலேயே அரசே தீர்த்து வைத்திருக்க வேண்டும். இந்த பா.ஜனதா அரசின் நோக்கம் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி கிடைக்கக்கூடாது என்பதே. அதனால் தான் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணாமல் இந்த அரசு அலட்சியமாக இருந்தது. சீருடையை முஸ்லிம் மாணவிகள் எதிர்க்கவில்லை. மாணவிகள் மீது வழக்குகளை பதிவு செய்வது சரியல்ல.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.