சென்னை: “வாக்குச்சாவடிகளுக்கு 5 மணிக்கு முன் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “மக்கள் அனைவரும் இன்று தங்களது வாக்குகளை வாக்குச்சாவடிக்கு வந்து பதிவு செய்ய வேண்டும். மாலை 5 மணிக்குள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாலை 5 மணிக்குப் பின்னர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு உள்ளவர்கள் அதற்கான சான்றிதழை கொண்டு வரவேண்டும்.
வாக்களிக்காமல் யாரும் வீட்டில் இருக்கக்கூடாது. மக்கள் தங்களது ஜனநாயக கடமையை பயன்படுத்த வேண்டும். மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 5794 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தபின்னர், அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4700-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு சதவீதங்கள் கண்காணிப்பு மையங்களில் சேகரிக்கப்படும். வாக்களிக்க தகுதியானவர்கள் அனைவரும் வாக்களித்து, தங்களுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய உதவியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணைய விதிகளின்படி 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நேரம் என்றாலும்கூட, வாக்குச்சாவடிகளுக்கு 5 மணிக்கு முன் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். அனைத்து இடங்களிலும் அமைதியான சூழல் நிலவுகிறது. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்துவதில் சில குறைபாடுகள் இருந்தன, அதனை அதிகாரிகள் சென்று சரிசெய்துள்ளனர்”.இவ்வாறு அவர் கூறினார்.