இராசிபுரம் நகராட்சியின் 27 வார்டுகளிலும் இருபெரும் திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு வீடுவீடாக சென்று பணத்தை கொடுத்து வாக்கு கேட்டு கொண்டு வருவதாக கூறி, சமூக ஆர்வலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. தமிழகம் முழுக்க இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 17 – ம் தேதியோடு பிரசார காலம் முடிவடைந்தது. நேற்று பிரதானக் கட்சிகள் அங்கங்கே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அந்த வகையில், நேற்று இரவு சராசரியாக தி.மு.க ரூபாய் 1500-ம், அதிமுக 1000 ரூபாயும் என்ற அளவில் வீடுதோறும் பல குழுக்களாக சென்று பணம் பட்டுவாடா செய்ததாக கூறி சமூக ஆர்வலர்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் நல்வினைச் செல்வன் என்பவர், சமூக ஆர்வலர்களோடு போராட்டத்தில் குதித்தார். ‘என்ன நடந்தது?’ என்று அவரிடம் கேட்டோம்.
“இரண்டு பிரதானக் கட்சிகளும் இங்கே நீக்கமற பணம் கொடுப்பதாக தகவல் வந்தது. ராசிபுரத்தில் கடும் போட்டி நிலவும் வார்டுகளில் தி.மு.க ஒரு படி மேலே சென்று வெற்றி பெற்று வந்தால், 2 கிராம் தங்கம் என்று ஒரு சில வார்டிகளிலும், ஒரு சில வார்டுகளில் வெள்ளி கொலுசு தருவதாகவும் கூப்பன்களை வீடு தோறும் கொடுப்பதாக தகவல் வந்தது. இராசிபுரம் 19 – வது வார்டு காட்டூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் இருந்த நிலையில், அந்த பள்ளியின் தெருவில் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கூப்பன்களை கொடுப்பதாக அங்குள்ள்ளவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி விரைந்து சென்று கூப்பன்களுடன் கையும் களவுமாக அந்த இளைஞர்களை பிடித்துக் வைத்து கொண்டு, இராசிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தோம்.
உடனே வருவதாக கூறிய தேர்தல் பறக்கும் படையினர், காலம் கடந்து தான் வந்து சேர்ந்தனர்..பறக்கும் படையானது காலை 6 முதல் மதியம் 2 மணி வரை ஒரு குழுவும், 2 மணியில் இருந்து 10 மணி வரை ஒரு குழுவும், 10 மணி முதல் காலை வரை ஒரு குழுவும் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டு தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டு இருந்தன. ஆனால், ஒருவருக்கொருவர், அவரிடம் சொல்லுங்கள் இவரிடம் சொல்லுங்கள் என்று தட்டிக்கழித்து விட்டனர். ஒருவழியாக பறக்கும் படை அதிகாரிகள் காலதாமதமாக காட்டூர் பகுதிக்கு வந்தனர். அதனால், பொதுமக்களுடன் அவர்கள் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தை செய்தோம். அதன்பிறகு, இராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், முற்றுகைப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால், இருகட்சிகளும் கிட்டத்தட்ட பணபட்டுவாடாவை முடித்துவிட்டது.
சாதாரண கவுன்சிலர் பதவிக்கு இவ்வளவு பணம் கொடுத்து ஜெயித்து பொறுப்புக்கு வந்தால், பிறகு எப்படி அவர் நேர்மையாக மக்களுக்கு உழைப்பார்?. சகலத்திலும் ஊழல் பண்ணவே நினைப்பார். தேர்தல் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி கொண்டு, பணபலம் இருந்தால் வெல்லலாம், அதிகாரம் இருப்பவர்கள் எதையும் செய்யலாம் என்பதான சூழல் ஆரோக்கிய அரசியலுக்கு உகந்த விசயமாக இல்லை. திராவிட கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் தரும் நிலை போய், பணத்திற்கும் கூடுதலாக தங்க காசுகள், வெள்ளி கொலுசுகள் அதுவும் தேர்தல் முடிந்த பிறகு தருவதற்கான கூப்பன்கள் வழங்குவது என்று அடுத்த நிலைக்கு போயிருப்பது, ஜனநாயகத்தை கொலைசெய்யும் நிலைக்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறார்கள். உண்மையில், இந்திய தேர்தல் ஜனநாயகம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை” என்றார் வேதனை வெளிப்படும் குரலில்.