சென்னை: ”உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்” என்று தமிழ்த் தாத்தா உவேசா பிறந்தநாளில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உ.வே.சா. தமிழகத்தின் தொலைதூர பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த ஓலைச்சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி, சங்க இலக்கியத்தின் கருவூலங்களாகத் திகழும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் பல்வேறு சிற்றிலக்கிய நூல்கள் பலவற்றையும் பதிப்பித்து தமிழ் சமுதாயத்திற்கு பெரும்தொண்டாற்றினார். தமிழ் சங்க இலக்கியங்களின் ஓலைச்சுவடிகளை தேடித்தேடி பதிப்பித்து தன் வாழ்நாளை தமிழ்ப்பணிக்காகவே செலவிட்ட தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் 168வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பிரதமர் வாழ்த்து: உ.வே.சாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது: தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்.
தமிழகத்தில் மரியாதை: சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும்செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன்,இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தமிழ்வளர்ச்சி இயக்குநர் (கூ.பொ) ப.அன்புச்செழியன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.