ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் லக்ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஒற்றையர் பிரிவில் வெற்றி கண்டனர்.
கிரண் ஜார்ஜ் (ஒற்றையர்), ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் குமார், மஞ்சித் கவாய்ராக்பாம்- கோந்துஜாம் (இரட்டையர் பிரிவு) ஆகியோர் தோல்வியை சந்தித்தனர். இந்த பிரிவில் இந்தோனேஷியா (3 வெற்றி) முதலிடமும், தென் கொரியா (2 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 1-4 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானிடம் தோற்றது. இந்திய அணியில் அஷ்மிதா சாலிஹா (ஒற்றையர் பிரிவு) மட்டும் வெற்றி பெற்றார். மற்ற வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்தனர். தனது 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட இந்தியா லீக் சுற்றுடன் நடையை கட்டியது.