மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆசியாவிலேயே பெரிய சாண எரிவாயு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்தியாவில் குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதற்காக ‘தூய்மை இந்தியா 2.0’ திட்டம் மத்திய அரசால் அண்மயைில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரூ.150 கோடி செலவில் சாண எரிவாயு ஆலை கட்டப்பட்டு வந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய இந்த ஆலை கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, அதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி முறையில் திறந்து வைத்தார்.
இந்த ஆலையானது 550 டன் இயற்கை கழிவுகளை தரம்பிரிக்கும் திறன் கொண்டதாகும். அதே போல், அந்தக் கழிவில் இருந்து 17 ஆயிரம் கிலோ இயற்கை எரிவாயுவையும், 100 டன் எடைக்கொண்ட இயற்கை உரங்களையும் இந்த ஆலை உற்பத்தி செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவை தூய்மைப்படுத்த இதுபோன்ற சாண எரிவாயு ஆலைகள் அதிக அளவில் அமைக்கப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 75 பெரிய நகரங்களில் இதுபோன்ற எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும். நாட்டில் உள்ள நகரங்களை தூய்மையாகவும், மாசில்லாத பகுதிகளாகவும் மாற்றும் வரை இந்த இயக்கம் தொடரும்” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM