பாட்னா: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்றிரவு திடீரென பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இதற்குமுன் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்த கட்சியின் துணைத் தலைவராகினார்.
ஆனால், கட்சியின் தலைவரும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.
மே.வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் பின்னர் காங்கிரஸில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் நேற்றிரவு திடீரென பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் உள்ள பிஹார் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இருவரும் சுமார் இரண்டு மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பைப் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் உறுதி செய்தார். அதேநேரம் இது சாதாரண சந்திப்பு தான் என்றும் இது குறித்து ஊடகங்கள் தங்கள் யூகங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல பிரசாந்த் கிஷோர் தரப்பிலும் இது மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு என்றே கூறப்பட்டுள்ளது.