மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் பிரிவினைவாதிகளை ஏவிவிட ரஷ்யா முயற்சி மேற்கொள்வதாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் எல்லை பதற்றம் தற்போது அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த ரஷ்யா பிரிவினைவாத அமைப்பினர் தூண்டி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டுக்குள் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் ஆட்சி கலைக்கப்படலாம் என ரஷ்ய புதிய அரசு கணித்து உள்ளதாகவும் இதனாலேயே உக்ரைனுக்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது. இதனை அடுத்து விழித்துக்கொண்ட உக்ரைன் அரசு இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனால் தற்போது மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
முன்னாள் சோவியத் யூனியன் நாடான உக்ரைன் ரஷ்யாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்பட்டு வருகிறது. நேட்டோ நாடுகளுடன் இணைய விரும்பும் உக்ரைனை மீண்டும் கையகப்படுத்த ரஷ்யா முயன்று வருகிறது. இதனால் இரு நாட்டின் எல்லைகளிலும் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டன. எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்கிற அபாயகரமான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது ஒரு புதிய பிரச்னை கிளம்பியுள்ளது.
உலகின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றான கிரிமியன் தீபகற்பம் உக்ரைன் நாட்டில் உள்ள பிரிவினைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு துவங்கி இப்பகுதிக்கு ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் உக்ரைன் ராணுவ வீரர்கள் மற்றும் ரஷ்ய ஆதரவு கொண்ட பிரிவினைவாதிகள் உள்ளிட்ட 14 ஆயிரம் பேர் இந்த விவகாரத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் தொடர் மோதல் நீடிப்பதால் இந்த பிரிவினைவாதிகள் மூலமாக உக்ரைனுக்குள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ரஷ்ய அரசு முயற்சி மேற்கொள்கிறது. நேரடியாக அரசுடன் போர் புரியாமல் மறைமுகமாக பிரிவினைவாதிகளுக்கு ஆயுத மற்றும் இதர வசதிகள் செய்து கொடுத்து உக்ரைன் நாட்டு அமைதிக்கு களங்கம் விளைவிக்க புடின் அரசு முயல்வதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
Advertisement