வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் தி.மு.க சார்பில் எம்.சுதாகர், பா.ம.க சார்பில் ஆர்.டி.பரசுராமன் போட்டியிடுகிறார்கள். இந்த வார்டில் அ.தி.மு.க வேட்பாளரின் மனு குளறுபடி காரணமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால் அ.தி.மு.க போட்டியிடவில்லை. இந்த நிலையில், தி.மு.க மற்றும் பா.ம.க இடையே கடும் போட்டி நிலவியது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே இருக்கட்சியினர் இடையே சலசலப்பு இருந்துவந்தது.
மேலும் வாக்குப்பதிவும் மந்தமான நிலையிலேயே இருந்தது. மாலை 5 மணியளவில், வாக்குச்சாவடியை பா.ம.க-வினர் கைப்பற்றி கள்ள ஓட்டுப் பதிவு செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த தி.மு.க-வினர் அவர்களைத் தடுத்து வெளியேறுமாறு கூறினர். பா.ம.க தரப்பில் வெளியிலிருந்தும் ஆள்கள் வரவழைக்கப்பட்டிருந்ததால், பதற்றம் தொற்றிக்கொண்டது.
முகவர்கள் மூலமாக பா.ம.க-வினர் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயல்வதாகக் கூறி தி.மு.க-வினர் வாக்குச்சாவடி முன் அமர்ந்து போராட்டம் செய்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அவர்களைச் சமாதானம் செய்தனர். இந்தச் சம்பவத்தால், வாக்குச்சாவடி முன் பரபரப்பான சூழல் காணப்பட்டது.