இலங்கையில் இறுதி யுத்தத்திற்கு பின்னர் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க மிகவும் பாடுபட்டுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.
தம்மால் கையளிக்கப்பட்ட போதும் இதுவரையில் திரும்பி வராத உறவுகளுக்காக நேரடி சாட்சியாளர்களான இவர்கள் தொடர்ந்தும் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
பல பல போராட்டங்கள், பல்வேறு வடிவங்களில் கோரிக்கைகள் இவை அனைத்திற்கும் எப்போது பலன் கிடைக்கும்?
காலமே இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க இன்னொரு பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலை என்னவாகப்போகிறதோ என்ற அச்சம் எழத் தொடங்கி விட்டது.
நாள்தோறும் பதிவாகும் கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருட்கள் தொடர்பான சம்பவங்களே இந்த பீதியை கிளப்புகின்றன.
தமிழர் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் வெளிநாட்டவர்களையும் ஈர்த்து வருகிறது. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் நம் தமிழ் அன்னையின் சிறப்புக்களை பல பகுதிகளில் தாங்கி நிற்கின்றன.
இப்படி பல்வேறு பெருமைகளையும், கடந்த கால ரணங்களையும் வடுக்களையும் தாங்கி நிற்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலம் அடுத்து வரும் சந்ததிகளின் எதிர்காலத்திலேயே தங்கியுள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இவ்வாறானதொரு சூழலில் தற்போது வடக்கு, கிழக்கில் அதிகளவான போதைப்பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரம் பொலிஸாரின் சுற்றிவளைப்புக்களில் சிக்கி வருகின்றன.
இவற்றிற்கு காரண கர்த்தா யார்? இவ்வாறாதொரு மோசமான படிப்பினையை வளர்ந்து வரும் எம் எதிர்கால சந்ததிக்கு காட்டிக் கொடுக்கும் நயவஞ்சகர்கள் யார்?
இது இவ்வாறிருக்க கண்ணில் படும் பல செய்திகளில் 17 மற்றும் 18 தொடக்கம் 25 வயது இளைஞர்கள் அதிகளவில் போதைப்பொருள் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் சிக்குகின்றார்கள் என்பதையே காட்டுகிறது.
எதனால் இந்த நிலைமை? எந்த விடயங்களையும் பகுத்தறிந்து யோசித்து நல்லது எது கெட்டது எது என்பதை ஆராய்ந்து நல்லதை மாத்திரமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஏனையோருக்கும் சொல்லித் தருகிறது எம் கலாச்சாரம்.
இவ்வாறுள்ள தமிழர் பகுதிகளில் பிறந்து மரபு கலாச்சாரம் என்பவற்றை பார்த்து பழகி வரும் இளைஞர்கள் தீய வழிக்கு செல்வதன் காரணம் என்ன?
தாய், தந்தைக்கும், தாய் பூமிக்கும் சேர்த்துக் கொடுக்கும் நற்பெயர் இதுவா?
இதேநேரம் கொள்ளை சம்பவங்களும் பதிவாகின்றன. தொலைபேசி, பணம், நகை பறிப்பு இவற்றிற்கும் பஞ்சமில்லை.
ஆக மொத்தத்தில் வடக்கு, கிழக்கில் பொலிஸாருக்கு சிறப்பாக வேலை செய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றனரா எமது இளைஞர்கள்?
தவிர்க்கப்பட வேண்டிய கொலை, களவு, பொய், கள், காமம் என்ற பஞ்சமா பாதகங்களை நாமே வளர்த்தெடுத்து நம் பாரம்பரியத்தினதும், இந்து சமயத்தினதும் வரலாற்றை அழிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றோமா?
வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில், நுனி நாக்கில் ஆங்கிலத்தை கக்குவதை பெருமையாக நினைக்கும் இந்த சமுதாயத்தில் நம் கலாச்சாரம் பெருமை அழியாது பாதுகாப்பது நமது கடமையே.
கலாச்சாரம், மதம், பண்பாடு இவை இருக்கட்டும். ஒரு மனிதனாக நாம் இந்த பூமியில் வாழ வேண்டாமா?
உழைத்து வாழ்வதே உத்தமம் என்பதை யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லையே.
போதைப்பொருட்கள் பாவித்தல், அதை விற்பனை செய்தல் அதனுடன் தொடர்புடைய விடயங்களில் ஈடுபடுதல் என்பவை எமது எதிர்காலத்தை நாமே கேள்விக்குறியாக்கி கொள்ளும் செயற்பாடுகளே.
வடக்கு, கிழக்கின் இளைஞர்களே உங்களை தவறான பாதையில் நடத்த முற்படும் எந்தவொரு விசமியாக இருந்தாலும் அதனை வீழ்த்தி நற்பாதையின் படி நடக்கத் துவங்குங்கள்.
ஏற்கனவே இரத்தத்தில் தோய்ந்துள்ள வடக்கு, கிழக்கை மேலும் சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது தர்மமே அல்ல. இளைஞர்கள் தமது கடமையுணர்ந்து சிந்தித்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
ஏனெனில், உலகம் வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் இளைஞர்கள் எதிர்காலம் குறித்தும் தமது அரசியல் இருப்பு குறித்தும் சிந்தித்தாக வேண்டும். இல்லையேல் நிலைமை படுமோசமாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.