உக்ரைனின் எல்லைப் பகுதியில் தங்களது நாட்டு ராணுவத்தை ரஷ்யா குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.
‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் சுமார் 1 லட்சம் படைவீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகயை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன..
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “ ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. ரஷ்யா ஏதோ செய்ய இருக்கிறது” என்று தெரிவித்தார்.
பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் ட்ருஸ் கூறும்போது, “சீனாவும், ரஷ்யாவும் சர்வாதிகாரத்தை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய நினைக்கின்றன. பெரிய தவறு செய்வதற்கு முன்னர் உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் நிச்சயம் வெளியேற வேண்டும். ரஷ்யா தனது வரலாற்றிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆக்கிரமிப்பு ஒரு பயங்கரமான புதைகுழி . அது உயிரிழப்புக்கு வழிவகுக்கும்” என்று அவர் எச்சரித்திருக்கிறார்.