சிகாகோ: அமெரிக்காவில் நேற்று முன்தினம்5-ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்பட்டது. இதனால் விமானங்களின் மின்னணு செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்பதால் இந்தியாவிலிருந்து இயக்கப்படும் போயிங் விமானங்களை ரத்து செய்யுமாறு போயிங் நிறுவனம் அறிவுறுத்தியது.
போயிங் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் 8 விமான சேவைகளை ஏர் இந்தியா ரத்து செய்திருந்தது. உரிய சோதனைகளுக்குப் பிறகு மின்னணு பாதிப்பு ஏற்படாதுஎன்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சேவைகளைத் தொடருமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு போயிங் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நியூயார்க் நகருக்கு விமான சேவையைஏர் இந்தியா தொடங்கியுள்ளது. அதேபோல சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கும்விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களான வெரிஸோன், ஏடி அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்கள் சி- பேண்ட் அலைவரிசையிலான 5 ஜி அலைக்கற்றை சேவையைத் தொடங்கியுள்ளன. இதனால் பெடரல் ஏவியேஷன் அமைப்பு விமானங்களின் ரேடியோஅல்டிமீட்டர் உள்ளிட்ட சேவைகள்பாதிக்கப்படலாம் என்று எச்சரித்தது.
அல்டிமீட்டர் சாதனமானது மிக மோசமான வானிலையின்போது விமானம் தரையிறங்குவதற்கு மிகவும் அவசியமானதாகும். இதுபாதிக்கப்பட்டால் விமானம் தரையிறங்குவதில் பிரச்சினை நேரலாம் என்பதால் விமானங்களை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.