ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில பணியாளர் தேர்வு ஆணையத்தால் பல்வேறு பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கான தேர்வுகளில் போஜ்புரி, மாகி போன்ற வட்டார மொழிகள் சேர்க்கப்பட்டன. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்பாத், போக்காரோ மாவட்டங்களில் மொழி பாதுகாப்பு கமிட்டி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. 2 மாவட்டங்களிலும் பரவலாக இந்த மொழியை பேசுவோர் இல்லை. அப்படி இருக்கையில் ஏன் சர்ச்சைக்குரிய இந்த உத்தரவு போடப்பட்டது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். மாநில அமைச்சர் ஆலம்கிர் ஆலம், ஜேஎம்எம் சட்டமன்ற உறுப்பினர் சபிதா மகாட்டோ, மாநில காங். தலைவர் ராஜேஷ் தாக்கூரும் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து உள்ளூர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, வட்டார மொழிகள் பட்டியலில் இருந்து இந்த 2 மொழிகளும் நீக்கப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறப்படுவதாக மாநில பணியாளர், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மொழிகள் துறை நேற்று அறிவித்தது. இந்த மாநிலத்தில் இந்தி, ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ளது. இருப்பினும், 16 வட்டார மொழிகள் 2வது மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.