மதுரை
மதுரை நகரில் வாக்களித்து விட்டு வரும் மக்களுக்குப் பண டோக்கன் கொடுத்த பாஜகவினர் பறக்கும் படையிடம் சிக்கினர்
நேற்று தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ரொக்கப் பணம், பரிசுப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று வாக்குப்பதிவு நடந்த போதிலும் இது போல நிகழ்வுகள் நடந்துள்ளன.
நேற்று மதுரை மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட நரிமேட்டில் உள்ள ஒரு பூத் அருகே பாஜ கட்சியினர் நின்று, வாக்களித்து விட்டு வந்த மக்களிடம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்கான டோக்கனை கொடுத்து கொண்டிருப்பதாகப் பறக்கும் படைக்கு திமுக வேட்பாளர் தாய் முரளி கணேஷ் புகார் செய்தார். வடக்கு மண்டல பறக்கும் படை தாசில்தார் விக்னேஷ் மற்றும் காவல்துறையினர் அங்கு உடனடியாக விரைந்து வந்தனர்.
இதைக் கண்ட பாஜகவினர் அங்கிருந்து நழுவ முயன்று 2 பேர் தப்பினர். பறக்கும் படையினர் மீதமிருந்தவர்களைப் பிடித்து விசாரித்தனர். பாஜகவினரிடம் இருந்து வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த 450 டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறக்கும் படையிடம் சிக்கியவர்களிடம் விநியோகம் செய்தது தொடர்பாகக் கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.