பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி அந்த மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று காலை 8 மணி அளவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, கேப்டன் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மொத்தம் 1300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 2.14 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். வாக்குப்பதிவு முடிவுகள் மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ளன.
மத்திய அரசு கொண்டு வரவிருந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகள் முக்கிய பங்கு வகித்தனர். எனவே, இந்தத் தேர்தலில் பஞ்சாப்பில்
பாஜக
வெற்றிப்பெற வாய்ப்பில்லை என்றும், ஆளும் காங்கிரஸுக்கும்,
ஆம் ஆத்மி
கட்சிக்கும் இடையேதான் அங்கு போட்டி எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளதாக, வாக்களித்த பின் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: இதனிடையே, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட மொத்தம் 600 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர்.