அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், மாணவர்கள் மீதான பாகுபாடு எதிர்ப்புக் கொள்கைகளில் சாதியைச் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல நூற்றாண்டுகளாக, இந்தியாவில் சாதியப் பாகுபாடு வழக்கத்தில் உள்ளது. சாதிப் பாகுபாடுகள் தற்போது இல்லை என்று பலர் வாதிட்டாலும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இந்தியாவில் இன்னமும் நடந்து கொண்டிருப்பதைச் செய்திகளில் காணலாம்.
இந்தியாவில் மட்டும் சாதியப் பாகுபாடு இல்லை. தெற்காசிய நாடுகளிலும் சாதியப் பாகுபாடுகள் படர்ந்துள்ளன. உதாரணத்துக்கு நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் சாதிய வழக்கம் உள்ளது.
இந்த நாடுகளிலிருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள் சாதியப் பாகுபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாக நேபாளத்தைச் சேர்ந்த பிரேம் பாரியர் கூறியுள்ளார்.
கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பிரேம் பாரியர் அங்கு மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடுகள் குறித்துக் கூறும்போது, “நான் ஒரு தலித். நேபாளத்தில் எங்கள் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக நான் அமெரிக்காவுக்குச் சென்றேன். நான் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் சாதி ரீதியிலான பாகுபாட்டைச் சந்தித்தேன்.
எனது முதுகலை பட்டப்படிப்பின்போது நேபாளத்தைச் சேர்த்த இரு மாணவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் எனது பெயரை நான் அறிமுகம் செய்தபோது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அமெரிக்காவில் உள்ள 25% தலித் மக்கள் சாதி ரீதியிலான பாகுபாட்டைச் சந்திக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான பாகுபாடு எதிர்ப்பு தொடர்பான கொள்கைகளில் சாதியைச் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைகழக வேந்தர் ஜோசப் கேஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், “திறமையான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் வரவேற்று, வெற்றி பெற ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் விரும்புகிறது” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் பல மனித உரிமை அமைப்புகள் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின் இந்த முற்போக்கு நடவடிக்கையைப் பாராட்டியுள்ளன.