நகர்ப்புற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி, மாநிலத் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி அளவில் நிறைவுபெற்றது.
இதில் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பாக வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ஆளும் கட்சியான திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேர்தலில் வாக்குப்பதிவின் போது பல இடங்களில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், கள்ள ஓட்டு செலுத்தியதாகவும் பல இடங்களில் புகார்கள் எழுந்தது. குறிப்பாக கோவையில் ஆளுங்கட்சியினர் தேர்தல் வாக்குப் பதிவின்போது பணப்பட்டுவாடா உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள மாநில தேர்தல் ஆணையத்தின் முன்பு, மக்கள் நீதி மையம் கட்சியின் சேர்ந்த வேட்பாளர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக, இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், இது சம்பந்தமாக தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு கொடுப்பதற்காக மக்கள் நீதி மையம் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவே, கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.