இலங்கைக்கு எதிரான தொடர்: இந்திய 20 ஓவர் அணியில் மீண்டும் ஜடேஜா, சஞ்சு சாம்சன்..!!

புதுடெல்லி, 
இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இருந்து ரஹானே, புஜாரா நீக்கப்பட்டனர். காயத்தில் இருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பினர்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்த மாதம் இறுதியில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி லக்னோவில் வருகிற 24-ந் தேதியும், 2-வது, 3-வது 20 ஓவர் போட்டிகள் தரம்சாலாவில் முறையே 26, 27-ந் தேதியும் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் மொகாலியிலும் (மார்ச் 4-8), 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் (பகல்-இரவு) பெங்களூருவிலும் (மார்ச் 12-16) நடைபெறுகிறது.
இலங்கைக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. விராட்கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியதை அடுத்து எதிர்பார்த்தபடி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் இனிமேல் மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்துவார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பி இருப்பதுடன் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
காயம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு அணியில் இடம் பெறாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முழு உடல் தகுதியை எட்டியதால் இந்திய 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பி இருக்கிறார். இதேபோல் காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு மறுபடியும் 20 ஓவர் அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.
20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விராட்கோலி, ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு 20 ஓவர் தொடரில் இருந்து மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து முழுமையாக தேறாததால் அவரது பெயர் கருத்தில் கொள்ளப்படவில்லை. இதேபோல் காயத்தில் சிக்கி இருக்கும் லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வரும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருந்தாலும், உடல் தகுதியை பொறுத்தே அவர் அணியில் நீடிப்பது இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் பேட்டிங்கில் சோபிக்காத மிடில் ஆர்டர் பேஸ்மேன்களான ரஹானே, புஜாரா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேலின் காயம் குணமடையாததால் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார் புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய 20 ஓவர் அணி வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான்.
இந்திய டெஸ்ட் அணி வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங் பன்சால், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, சுப்மான் கில், ரிஷாப் பண்ட், கே.எஸ்.பரத், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.
தேர்வு குழு தலைவர் விளக்கம்
அணி அறிவிப்புக்கு பிறகு தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா காணொலி மூலம் அளித்த பேட்டியில், ‘ரோகித் சர்மா நமது நாட்டின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர். அவர் எல்லா வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது மிகவும் முக்கியமானது. அவர் டெஸ்ட் கேப்டனாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த பதவிக்கு மற்ற யாருடைய பெயரும் ஆலோசிக்கப்படவில்லை. அவரை நாங்கள் எப்படி நிர்வகிக்கிறோம் என்பது முக்கியமானதாகும். எல்லா கிரிக்கெட் வீரர்களும் தொழில்முறையாக விளையாடக்கூடியவர்கள். அவர்களுக்கு தங்களது பணிச்சுமையையும், உடல் தகுதியையும் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது தெரியும். ரோகித் சர்மா நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா தலைமையின் கீழ் பும்ரா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல் ஆகியோரின் தலைமைப் பண்புகளை வளர்க்க நாங்கள் விரும்புகிறோம். இதில் யார் அடுத்த கேப்டனாக உருவெடுப்பார் என்று சொல்வது கடினம். ஆனால் இதில் இருந்து நிச்சயம் ஒரு பெயர் வெளிப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ரஹானே, புஜாரா, விருத்திமான் சஹா, இஷாந்த் ஷர்மா ஆகியோரை இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து நீக்குவது குறித்து நீண்ட விவாதித்து பிறகு தான் முடிவு எடுத்தோம். அவர்களை உள்ளூர் போட்டிகளில் விளையாடும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். அவர்களுக்கு அணியின் கதவு திறந்தே இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.