தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மும்பையில், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை இன்று சந்தித்து பேசினார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக, பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களையும், பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இருவருமே ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவை, தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மும்பையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக, ஐதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மும்பைக்கு சென்றார். அவரை வரவேற்கும் விதமாக மும்பை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் உள்ள தோட்டத்தில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, உத்தவ் தாக்கரேவின் இளைய மகன் தேஜஸ் தாக்கரே, சிவசேனா மூத்த எம்.பி. சஞ்சய் ராவத், நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர். மேலும், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுடன், அவரது மகளும், எம்எல்ஏவுமான கவிதா மற்றும் கட்சி மூத்த எம்பிக்கள் சிலரும் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது.
மதிய உணவுடன் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையின் போது, பாஜகவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் சிவசேனா கட்சி தனது முழு ஆதரவினை வழங்கும் என, தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவிடம், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர்
உத்தவ் தாக்கரே
உறுதிப்பட தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை, சந்திரசேகர் ராவ் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் அனைத்து நகர்வுகளும் அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.