தனி விமானம்; போஸ்டர்; மதிய விருந்து… – சந்திரசேகர் ராவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்த சிவசேனா

மும்பை: பாஜக அல்லாத அணியை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். சந்திப்புக்கு வந்த சந்திரசேகர் ராவ்வுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்து அசத்தினார் உத்தவ் தாக்கரே.

2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வும். இதன்தொடர்ச்சியாக, பாஜக அல்லாத மாநில முதல்வர்கள், முக்கிய கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார் சந்திரசேகர் ராவ். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் தொடர்ந்து பேசிவரும் மம்தா மற்றும் சந்திரசேகர் ராவ் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த அணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இடமில்லை என்பதை மம்தா தெளிவுப்படுத்தியுள்ள நிலையில், சில தினங்கள் முன்பு முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவருமான எச்.டி.தேவேகவுடாவை சந்தித்து பேசினார் சந்திரசேகர் ராவ். தொடர்ந்து இன்று மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். முன்னதாக இவர்களின் சந்திப்பு 10ம் தேதியே நடைபெற இருந்த நிலையில், இன்று தான் நடந்து வருகிறது. உத்தவ் தாக்கரேவே அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, தனது மகள் கவிதா, டிஆர்எஸ் எம்.பி.க்கள் ஜே.சந்தோஷ் குமார், ரஞ்சித் ரெட்டி மற்றும் பி.பி.பாட்டீல் சகிதமாக தனி விமானத்தில் சந்திரசேகர் ராவ் சென்றார்.

பின்னர், அவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மதிய விருந்து அளித்த உத்தவ் தாக்கரே, தனது தோட்டத்தில் அமர்ந்து நீண்ட நேரம் ஆலோசித்தார்கள். இந்த ஆலோசனையில் உத்தவ் தாக்கரேவின் மகன் தேஜஸ், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோருடன் நடிகர் பிரகாஷ் ராஜ்ஜூம் பங்கேற்றிருந்தார். முன்னதாக இந்த சந்திப்பை வெகுவாக, சிவசேனா விளம்பரப்படுத்தியது. தனது ‘சாம்னா’ இதழில், ‘சந்திப்பு பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அரசியல் ஒற்றுமைக்கான செயல்முறையை விரைவுபடுத்தும்’ என்று குறிப்பிட்டு சந்திரசேகர் ராவ்வுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவரை வரவேற்கும் விதமாக மும்பை மாநகரின் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டி அமர்களப்படுத்தியது சிவசேனா.

சந்திப்புக்கு பின் பேசிய சந்திரசேகர் ராவ், “நாட்டின் அரசியல் மற்றும் வளர்ச்சியின் வேகம் குறித்து விவாதிக்கவே நான் மகாராஷ்டிராவுக்கு வந்தேன். உத்தவ் ஜியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் சகோதரர்களாக பல விஷயங்கள் தொடர்பாக விவாதித்தோம். எங்களைப் போன்றே சிந்தனை கொண்ட பலர் நாட்டில் உள்ளனர். அவர்களிடமும் நாங்கள் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் ஹைதராபாத் அல்லது வேறு ஏதுனும் இடத்தில் எங்களின் ஆலோசனை நடைபெறும். எங்களின் சந்திப்பின் நல்ல முடிவை மிக விரைவில் நீங்கள் காண்பீர்கள். தெலுங்கானாவுக்கு வருமாறு உத்தவ் ஜியை அழைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.