சண்டிகர்:
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போட்டனர்.
காலை 11 மணி நிலவரப் படி 18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 1 மணி நிலவரப்படி 34.10 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக மாலர் கோட்லாவில் 57.07 சதவீதம், குறைந்தபட்சமாக மொகாலியில் 42 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 60 சதவீதத்தை தாண்டியது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தீவிரவாதிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் இருப்பதால் பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். 2013 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
பஞ்சாப் தேர்தலில் 93 பெண்கள் உள்பட 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் பல முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜனதா, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. சில விவசாய அமைப்புகளும் தேர்தல் களத்தில் உள்ளன. இன்று பதிவான வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.