பெங்களூரு,
பெங்களூருவில் நடந்து வரும் 8-வது புரோ கபடி லீக் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் புனேரி பால்டன் அணி 37-30 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 36-33 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியனான யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இன்னொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் 30-27 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்தது. லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த பாட்னா பைரட்ஸ், 2-வது இடம் பெற்ற தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
யு.பி.யோத்தா, குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு புல்ஸ், புனேரி பால்டன் அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இன்று ஓய்வு நாளாகும்.
நாளை நடைபெறும் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி.யோத்தா-புனேரி பால்டன், 2-வது வெளியேற்றுதல் சுற்றில் குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.