மும்பை: சீன தலைநகர் பெய்ஜிங்கில் 139-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான நீட்டா அம்பானி, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வை இந்தியாவின் வர்த்தக நகரான மும்பையில் நடத்துவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 82 உறுப்பினர்களில் 75 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் மட்டும் எதிராக வாக்களித்தார். 6 பேர் கலந்துகொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து ஐஓசி அமர்வை மும்பையில் நடத்த ஏறக்குறைய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. கடைசியாக இந்த அமர்வு டெல்லியில் கடந்த 1983-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 40 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. இதில் 2030-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரம் தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அமர்வை நடத்துவதற்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “2023-ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை நடத்த இந்தியா தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு மறக்க முடியாத அமர்வாக இருக்கும். மற்றும் உலக விளையாட்டுகளுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.