மணல், செங்கல், மரம் போன்ற பொருட்களை பயன்படுத்தாமல் நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பார்த்தவுடன் கண்களை கவரும் இந்த வீடு கூடலூர் அருகே அய்யன்கொல்லி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. பேபி என்பவருக்கு சொந்தமான இந்த வீடு, 1,500 சதுர அடியில் 10 லட்சம் ரூபாயில் உருவானது என்றால் ஆச்சரியமாக இருக்கும். மரம், செங்கல், மணல் போன்றவற்றை பயன்படுத்தாமல் கட்டப்பட்டிருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு.
ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்கள் மூலம் வீட்டின் மேற்கூரை, சுவர்கள், கதவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய குழிகள் தோண்டப்பட்டு, அதில் குழாய்களை பதித்து ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை கொண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அஸ்திவாரம் இன்றி கட்டப்பட்ட இந்த வீட்டை, தேவைப்பட்டால் வேறிடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறுகிறார், வீட்டின் உரிமையாளர் பேபி.
சாதாரண கட்டுமானப் பொருட்களை கொண்டு இது போன்ற வீட்டை கட்டினால் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறும் உரிமையாளர், காலநிலைக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ள இந்த வீடு, இயற்கை சீற்றங்களையும் தாங்கிப்பிடிக்கும் எனக் கூறுகிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM