இளநிலை மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் ஆகும்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு 27-ஆம் தேதியும், 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 28-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக 30-ஆம் தேதி நடைபெற்றது.
கலந்தாய்வுகள் முடிக்கப்பட்ட நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவ கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.
மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டு, மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் இம்மாதம் 18-ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை 21-ஆம் தேதி வரை நீட்டித்து மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்திருந்தது. கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
இன்று மாலை அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேரவில்லை என்றால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.