கடந்த மாதம் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஸ்துவ பள்ளியில் படித்துவந்த, அரியலூர் மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் தன் மரணத்துக்கு காரணம், மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஒரு காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருக்கிறது.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவியின் தந்தை முருகானந்தம் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த விவகாரத்தில் தற்போது சிபிஐ வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்ற உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
இதனையடுத்து, தஞ்சை கிறிஸ்துவப் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, சிபிஐ தற்போது முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்துள்ளது. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல், சிறார் நீதி சட்டம் பிரிவுகளான 75 மற்றும் 82 (1) கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பெண்கள் விடுதி வார்டன் சகாயமேரி மீதும் சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
(விடுதி வார்டன் சகாயமேரி ஏற்கனவே தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார். மாணவியை கழிவறை உள்ளிட்ட பணிகளை செய்ய சொல்லியதாகவும் குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)
இந்நிலையில், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை செய்வதற்காக, தலைநகர் டெல்லியில் இருந்து சிபிஐ குழு ஒன்று தற்போது தஞ்சைக்கு வந்துள்ளது.
சிபிஐ இயக்குனர் குல்கர்னி தலைமையிலான இந்தக் குழு தஞ்சை மைக்கேல்பட்டியில் உள்ள அந்த கிறிஸ்துவ பள்ளிக்கு சற்றுமுன் வந்துள்ளது. மேலும் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.