பெங்களூரு: இந்து இளைஞர் படுகொலையால் கர்நாடகாவின் ஷிவ்மோகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஷிவ்மோகா மற்றும் பத்ராவதி நகர்களில் 144 தடை உத்தரவு அமலாகியுள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? – ஷிவமோகா மாவட்டத்தின் சீகேஹாட்டி பகுதி பாரதி காலனியைச் சேர்ந்த ஹர்ஷா (26) நேற்றிரவு 10 மணியளவில் சில அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதனையடுத்து மெக் கேன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த நபர் ஆர்எஸ்எஸ் அங்கமான விஷ்வ ஹிந்து பரிஷத் சார்புடையவர் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஷிவமோகாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இச்சம்பவம் குறித்து, “ஹர்ஷா ஓர் இந்து மத செயற்பாட்டாளர். அவர் ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்தார். ஷிவமோகா மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கும் ஹர்ஷா படுகொலை வேதனையைத் தருகிறது. ஆனால் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது சரியாகாது” என்றார்.
மேலும் மருத்துவமனைக்கே சென்று ஹர்ஷாவின் தாய், தந்தை, சகோதரிகளை சந்தித்து தான் ஆறுதல் கூறியாதகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஷிவமோகா துணை ஆணையர் ஆர்.செல்வமணி, இன்று (பிப். 21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
பத்ராவதியில் 10 ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி தேர்வுகளுக்குத் தயாரிப்புகள் நடைபெறுவதால் கிராமப்புறங்களில் மட்டும் பள்ளிகள் நடைபெறுகின்றன.
குண்டர்கள் தான் காரணம்… – இதற்கிடையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த குண்டர்கள் தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறினார். காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவகுமார், மக்களுக்கு தவறான தகவலை அளித்து வன்முறையைத் தூண்டியிருக்கிறார். கல்லூரி வளாகத்தில் மூவர்ணக் கொடிக்குப் பதிலாக காவிக் கொடி ஏற்றப்பட்டதாக அவர் கூறியதே வன்முறை வெடிக்கக் காரணம். ஆனால் வன்முறை வெடித்த பின்னர் குஜராத்தில் இருந்து டிரக்குகளில் காவித் துண்டுகள் கொண்டுவரப்பட்டதையே தான் கூறியதாக மாற்றிப் பேசியுள்ளார்” என்றார்.
இதற்கிடையில் காவல் உயர் அதிகாரி ஒருவர், “இந்தs சம்பவத்துக்கும் கர்நாடக ஹிஜாப் விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஹர்ஷா மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையில் காவி கொடி! – செங்கோட்டையில் ஒரு நாள் காவிக் கொடி பறக்கும் என்று பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவையில் தங்கி கடந்த வாரம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.