பீஜிங்,
24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. முழுக்க முழுக்க உறைபனியில் நடந்த 15 வகையான விளையாட்டு போட்டிகளில் 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஒரே வீரரான பனிச்சறுக்கு வீரர் ஆரிப்கான் இரு பந்தயத்திலும் ஏமாற்றம் அளித்தார். போட்டியின் கடைசி நாளான நேற்று ஐஸ் ஆக்கியில் பின்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ரஷியாவை வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. பதக்கப்பட்டியலில் நார்வே 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என்று 37 பதக்கத்துடன் முதலிடத்தையும், ஜெர்மனி 12 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என்று 27 பதக்கத்துடன் 2-வது இடத்தையும் பிடித்தது.
பதக்கப்பட்டியலில் நார்வே ‘நம்பர் ஒன்’ அரியணையில் அமர்வது இது 9-வது முறையாகும். போட்டியை நடத்திய சீனா 3-வது இடத்தையும் (9 தங்கம் உள்பட 15 பதக்கம்), அமெரிக்கா (8 தங்கம் உள்பட 25 பதக்கம்) 4-வது இடத்தையும் பெற்றது. பனிச்சறுக்கில் அந்தரத்தில் பல்டி அடித்து சாகசம் பல நிகழ்த்திய சீன வீராங்கனை 18 வயதான எய்லீன் கு 2 தங்கம், ஒரு வெள்ளி வென்று போட்டியில் நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்தார்.
தீவிரமான கொரோனா கட்டுப்பாடுகள், ரஷிய இளம் ஸ்கேட்டிங் வீராங்கனை கமிலா வலியேவா மீதான ஊக்கமருந்து புகார், சீனாவின் மனித உரிமை மீறல்களை கண்டித்து சில நாடுகளின் தூதரக ரீதியான புறக்கணிப்பு போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒரு வழியாக சீனா போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.
இரவில் பீஜிங் தேசிய மைதானத்தில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் இந்த போட்டி நிறைவடைந்தது. இறுதியில் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு இதற்கான கொடி, அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை(2026-ம் ஆண்டு) நடத்தும் இத்தாலியிடம் ஒப்படைக்கப்பட்டது.