இம்பால்: நமது நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்று நாடாளுமன்றத்தில் நான் விவரித்தேன், இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது பேசுகையில் ‘‘தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள். மக்களின் கருத்தை அரசர் கேட்காது போல உங்கள் அரசு செயல்படுகிறது.
மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருந்தால், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். இந்தியா என்றால் இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஒன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒரு மாநிலத்துடன் பேசுவது, அதன் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒன்றியத்தின் பணிகள்.
கூட்டாட்சி என்பதே அதன் அர்த்தம். இது ராஜ்ஜியம் அல்ல. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது” என்று கூறினார்.
இந்தநிலையில் மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இம்பாலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவர் கூறியதாவது:
நான் பணிவுடன் வருகிறேன், ஏனென்றால் நீங்கள் கொடுக்க நிறைய இருக்கிறது, உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். பலதரப்பட்ட பழங்குடியினர், பள்ளத்தாக்குகள், மலைகள், இங்குள்ள அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மணிப்பூருக்கு வரும்போது மரியாதையுடன் வரவில்லை, புரிந்துகொண்டு வரவில்லை. அவர்கள் ஆதிக்க உணர்வுடன் வருகிறார்கள். நான் இங்கு வரும்போது, நான் என்ற உணர்வுடன் வரவில்லை, பணிவுடன் வருகிறேன்.
நமது நாட்டின் நிலைமை குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். நமது நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்று அங்கு நான் விவரித்தேன். இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை. அரசியலமைப்புச் சட்டத்தில், மாநிலங்களின் ஒன்றியம் என நம்மை வரையறுத்தே தேர்வு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.