சேலம்: வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டும். தவறு செய்பவர்கள் மீது நீதிமன்றத்தில் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் திமுக-வினருக்கு ஊடகம், வலைதளம் மூலமாக செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த 19-ம் தேதி சென்னையில் கள்ள வாக்கு செலுத்த முயன்ற ஒருவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். அது தவறு என்று முதல்வர் சொல்கிறாரா? குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, குற்றவாளிகளை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பது குற்றமா? தவறு செய்தவர்கள் தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக, எல்லா இடத்திலும் செய்வதைத் தான் ஜெயக்குமார் செய்துள்ளார்.
குற்றவாளியை பிடித்து ஒப்படைத்தற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் அவருடன் இருந்தவர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி, கண்டனத்துக்குரியது. முதல்வர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் கூடியவர். எங்கே குற்றம் நிகழ்ந்தாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, ஒப்படைப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. அப்போது தான் குற்றங்கள் களையப்படும். அப்படிதான் அதிமுக அரசு செயல்பட்டது. கள்ள வாக்கு செலுத்துபவர்களுக்கு, முதல்வர் துணை நிற்கிறார் என மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
திமுக-வின் 9 மாத ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குற்றவாளிகளுக்கு முதல்வரே துணை போவது, வேடிக்கையாக உள்ளது. அதிமுக-வைப் பொறுத்தரை சட்ட ரீதியாக எதையும் சந்திக்கத் தயார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மடியில் கனம் இல்லை, வழியில் பயம்இல்லை. குற்றவாளிகளை சட்ட ரீதியாகப் பிடித்து, ஒப்படைத்ததற்கு முதல்வர் கொடுத்த பரிசு இது.
தற்போது வந்துள்ள செய்தி, மாவட்ட ஆட்சியர்களுக்கும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும் வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது. அதில், வாக்கு எண்ணிக்கை நாளன்று, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், அவர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர்களும் அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திமுக அமைச்சர்கள், தேர்தல் பொறுப்பேற்றுள்ளனர். அந்த அமைச்சர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு, திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று அதற்குண்டான வழிமுறை செயல்படுத்துங்கள் என்று வாய்மொழி வந்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது- இதையெல்லாம் அறிந்து, ஏற்கனவே நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளோம். அதில், வாக்கு எண்ணும்போது, முதலில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எண்ணப்பட வேண்டும்.
ஒவ்வொரு வார்டின் வாக்குகள் எண்ணியதும் முடிவுகளை அறிவித்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின்னரே, அடுத்த வார்டின் வாக்குகளை எண்ண வேண்டும். ஆனால், அனைத்து வார்டின் வாக்குகள் எண்ணிக்கை முடிந்த பின்னரே, வெற்றிப்படிவத்தை கொடுக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தவறு, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தவறு செய்தால், நீதிமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுப்போம். நடுநிலையோடு, ஜனநாயக முறைப்படி, வாக்கு எண்ணும் அலுவலர்கள் செயல்பட வேண்டும்.
நகர்ப்புற தேர்தலுக்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி நடந்து கொள்ள வேண்டும். ஒருவேளை ஆட்சியாளர்களின் கட்டளைக்கு இணங்க, தவறாக நடந்து கொண்டால், சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நிலை ஏற்படும். அரசுக்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது. ஜனநாயக முறைப்படி கடமையை ஆற்ற வேண்டும். தேர்தல் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தவறு செய்தால், நீதிமன்றத்தை நாடுவோம், தண்டனை பெற்றுத் தருவோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, நல்லவர் போல, நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அவர் கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது முதல் தற்போது வரை, கோவையில் ஏதாவது ஒரு பிரச்சினைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. கோவை மாவட்டம் அமைதியானது. அங்கே ரவுடிகள், குண்டர்களை இறக்கி, சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க அவர் செயல்பட்டார். இந்த தேர்தலில் அது பிரதிபலித்தது. செந்தில் பாலாஜி, தேர்தல் விதிமுறைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். என்னென்ன தவறு செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் அவர் செய்துவிட்டார். அதனை அனைத்துக் கட்சிகளுமே தெரிவித்துள்ளன.
அதிமுக அரசு இருந்தபோது, நான் முதல்வராக இருந்தபோது, என்னுடைய தொகுதியில் அதிமுக வேட்பாளர்களில் ஒருவர் 9 வாக்கு வித்தியாசத்திலும், மற்றொருவர் 11 வாக்கு வித்தியாசத்திலும் தோல்வியுற்றபோது, அதனை முறைப்படி அறிவித்தோம். ஜனநாயகப்படி தேர்தலை நடத்தினோம். தோல்வி பயத்தால் திமுக இப்படி செயல்பட்டு வருகிறது. அதிமுக-வுக்கு தோல்வி பயம் கிடையாது. தேர்தல் ஆணையம் சுயமாக செயல்படவில்லை., காவல்துறை சுயமாக செயல்படவில்லை. இது வேதனைக்குரியது. காவல்துறை ஆட்சியாளர்களுக்கு ஏவல்துறையாக மாறிவிட்டது. வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டும். அதிக வாக்குகள் பெற்றவரை, வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். நீதிமன்றம் ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும்” என்று தெரிவித்தார். பேட்டியின்போது, முன்னாள் அமைச்சர் செம்மலை, முன்னாள் எம்எல்ஏ., வெங்கடாசலம் உள்ளிட்ட அதிமுக-வினர் பலர் உடனிருந்தனர்.