நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அன்று, கள்ள ஓட்டுபோட முயன்ற திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெயக்குமார் கைதுக்கு, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த கண்டன செய்தியில், “சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த கழக அமைப்பு செயலாளர் திரு.D.ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது ” என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எம்எல்ஏ., தனது கண்டன செய்தியில், “சென்னையில் உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட வந்தவரை விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த மாண்புமிகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை, மக்கள் விரோத திமுக அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்கில் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, வெகுஜன மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த திமுக தற்போது, சட்ட விரோதமாக அதிகார துஷ்பிரயோகத்தின் வாயிலாக இது போன்ற செயல்களை செய்து வருகிறது. இந்த நியாயமற்ற செயல்களுக்காக விடியா அரசிற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” என்று எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.