மும்பை,
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சாஹா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். அணியில் தேர்வு செய்யப்படாததற்கு ராகுல் டிராவிட்டை குற்றம்சாட்டினார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தினார் என்று சாஹா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டிராவிட் பேசியுள்ளார். “விருத்திமான் சாஹாவின் கருத்துகளால் காயமடையவில்லை, அவர் நேர்மைக்கும் தெளிவுக்கும் தகுதியானவர்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.
மேலும், சாஹாவின் பேச்சு குறித்து டிராவிட் கூறுகையில்,
“சாஹாவின் கருத்துகளால் உண்மையில் நான் காயமடையவில்லை. அவரது சாதனைகள் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. அவர் நேர்மைக்கும் தெளிவுக்கும் தகுதியானவர். இதனால் சாஹா மீதான என்னுடைய மதிப்பும் மரியாதையும் எப்போதும் குறையாது.
அணியில் உள்ள வீரர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களுடன் இதுபோன்ற விவாதங்களை தொடர்ந்து உரையாடுவேன். வீரர்களைப் பற்றி நான் சொல்வதை அவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை..
நீங்கள் வீரர்களுடன் கடினமான உரையாடல்களை மேற்கொள்ளலாம், ஒவ்வொரு முறை அணி தேர்வுக்கு முன்னரும் வீரர்களுடன் கலந்துரையாடுவேன்.
சில வீரர்கள் அணியில் விளையாடாமல் இருப்பதற்கும், தேர்வு செய்யப்படாமல் போவதற்கான காரணங்களை அவர்களிடம் விளக்குவேன். அந்த பேச்சால் சில வீரர்கள் காயப்படலாம். மனம் வருந்தலாம். அது இயற்கையானது தான்.
ரிஷப் பண்ட் அணியில் தேர்வு செய்யபட்டதால் தான் சாஹாவுக்கு இடம் கிடைக்கவில்லை. பண்ட் தன்னை ஒரு விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக நிலைநிறுத்தியுள்ளார். அதனால் அணியில் விளையடுவதற்கான வாய்ப்புகள் சாஹாவுக்கு குறைவு தான்.மேலும், நாங்கள் இளம் விக்கெட் கீப்பர் கே எஸ் பரத் போன்றவர்களின் ஆட்டத்திறன்களை மேம்படுத்த உள்ளோம்.
வீரர்களுடன் உரையாடாமல் இருப்பது எனக்கு எளிதான விஷயம், ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன். சரியான நேரம் வரும்போது அவர்கள் நான் கூறியதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்”
இவ்வாறு கூறினார்.