பிக்பாஸ் அல்டிமேட் – கமல்ஹாசன் பின்வாங்க காரணம் என்ன ?
உலக அளவில் புகழ் பெற்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக நடைபெற்று முடிந்தது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கினார். ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் அவருக்குக் கொரானோ தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். உடல் நலம் தேறிய பின் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த சீசனை நடத்தி முடித்தார்.
டிவியில் நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஓடிடி தளத்தில் 'பிக்பாஸ் அல்டிமேட்' என்ற பெயரில் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்டவர்களிலிருந்து இந்த ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களாகக் கலந்து கொண்டார்கள். ஓடிடியிலும் கமல்ஹாசனே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென இந்த ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்புப் பணியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அவரது திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என பலரும் அலச ஆரம்பித்தார்கள். நாம் விசாரித்தவரையில் ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லையாம். டிவி நிகழ்ச்சி முடிந்த உடனேயே இந்த ஓடிடி நிகழ்ச்சியை ஆரம்பித்ததாலும் மீண்டும் பார்த்த முகங்களையே பார்க்கவும் நேயர்கள் ஆர்வம் காட்டவில்லையாம்.
எனவே, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்ச்சியை முடித்துவிட பேசியிருக்கிறார்கள். அது கமல்ஹாசன் போன்ற மிகப் பிரலமான நடிகருக்கு இமேஜ் குறைவை ஏற்படுத்தும். அதனால், 'விக்ரம்' படத்தைக் காரணம் காட்டி அவரை விலகச் சொல்லிவிடலாம், போட்டியாளர்களை வெளியேற்றுவதில் வாரம் இருவர் என வைத்து அடுத்து மூன்று, நான்கு வாரங்களுக்குள் நிகழ்ச்சியை முடித்துவிடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார்களாம்.
கமல்ஹாசன் நேற்று விலகியதைத் தொடர்ந்து அவரது இடத்தில் யார் வரப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரானோ தொற்று ஏற்பட்டு கமல்ஹாசன் சிகிச்சையில் இருந்த போது ரம்யா கிருஷ்ணன்தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அவரையே இப்போது ஓடிடி நிகழ்ச்சிக்கும் கொண்டு வருவார்களா, அல்லது வேறு யாராவது பிரபலம் வருவாரா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.