அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட வந்த திமுகவினரை ஜெயக்குமார் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்றும் மனப்பான்மையில் ஜெயக்குமார் செய்த இந்த செயல் எந்த வகையில் முறைகேடானது? ஓரிடத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபரை பிடித்து, அவர் தப்பிக்கக் கூடாது என்பதற்காக கைகளை கட்டி போலீஸாரிடம் ஒப்படைப்பது என்பது தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்றிருக்கின்றன. அதுபோலவே, கள்ள ஓட்டு போட வந்த நபரை பிடித்து ஜெயக்குமார் போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர் செய்தது நியாயம் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே திமுகவினரின் அராஜகம் இருக்கும் என்ற மனநிலையால் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது. இதனை மறைத்து, தேர்தல் முடிவுகளை மாற்றிக் காட்டும் நடவடிக்கையாகவே ஜெயக்குமாரின் கைது நடவடிக்கையை அதிமுக பார்க்கிறது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் நிகழ்ந்த ஜனநாயகப் படுகொலையை சென்னை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டி மறு தேர்தலுக்கு உத்தரவிட்டதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.
இத்தனை ஆண்டுகள் கடந்தும் திமுக தனது ஜனநாயக விரோத செயல்களை கைவிடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. திமுகவின் இந்த அராஜகத்தையும், அதிமுகவினர் மீது முறைகேடாக நடத்தப்படும் தாக்குதலையும் சட்டத்தின் துணைக்கொண்டு கழகம் முறியடிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM