நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு முதல், இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 15 -18 வயதுக்குட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி இலக்கின் அடுத்தகட்டமாக 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கும் இதனை செலுத்த டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள ‘கார்பிவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
இந்த மருந்தின் செயல்திறன் குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்து, மருந்தை 12 -18 வயது வரை உள்ளவர்களுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.