உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்கு தலில் தங்களது எல்லைப் பகுதிகட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சேர உக்ரைன் ஆர்வம்காட்டுகிறது. இதனால், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. உக்ரைன் தரப்பிலும் படைகள் குவிக்கப்படுகின்றன. இதனால், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘21-ம் தேதி (நேற்று) காலை ரஷ்யா-உக்ரைன் எல்லையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய பகுதியான ரொஸ்டோவ் என்ற இடத்தில் உக்ரைன் பகுதியில் இருந்து சிறியரக பீரங்கிக் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால், எல்லையில்,ரஷ்ய எல்லைப் படையினர் பயன்படுத்தும் கட்டமைப்பு வசதிகள்சேதமடைந்துள்ளன’’ என தெரிவித்துள்ளது. இதனால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘உக்ரைனில், அத்தியாவசிய பணியில் இல்லாத இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் அனைவரும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும். உக்ரைன் – இந்தியா இடையே குறிப்பிட்ட நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்திய துாதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குடும்பத்தினரும் உடனடியாக வெளியேற வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.