மாடி வீடு #MyVikatan

சென்னையில் உள்ள எங்கள் வீடு, அறுபதுகளில் கட்டப்பட்ட வீடு. பாட்டி சொல்லுவாள், “து கட்டின வருஷம் உன் அண்ணன் 2 வயசு பிள்ளை, அப்போதுதான் பாம்பன் பாலம் அடிச்சுண்டு போச்சு”. ஆகவே, 1964.

அன்றைய தேதியில் பெருங்களத்தூரில் மொத்தமே 50-100 குடும்பங்கள் தான் இருந்தன. தெருவுக்கு ஒன்றென வீடுகள் இருக்கும். அந்த மூதாதையர் பலரின் குடும்பங்கள், அவர் தம் வாரிசுகள் இன்றளவும் அந்த ஊரில் தான் இருக்கின்றன.

ஒரு லெவல் வீடாக அந்த வீடு கட்டப்பட்ட 1960களில் சென்னையில் சிமெண்ட் தட்டுப்பாடு மிக அதிகம். அப்போது சிமெண்ட் ரேஷன் இருந்ததாக அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதாவது குறிப்பிட்ட அளவிற்கு மேல் சிமெண்ட் வாங்க முடியாது, அதனையும் முன் கூட்டியே பதிவு செய்து வாங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தலா இவ்வளவு quota என இருந்த காலம். இவ்வாறு அந்த வீடு பல ஆண்டுகளாக விட்டு விட்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டதால், அறைக்கு அறை சில பல வித்தியாசங்கள் தெரியும். சில அறைகளின் சுவர்கள் சுண்ணாம்பினால் பூசப்பட்டு இருந்தன. சிலவை பூச்சு இல்லாமலே இருந்தன. சின்னதும் பெரியதுமாக இரண்டு சமையற்கட்டு இருந்தது. இது போல.

சொந்த வீடு

அதோடு, அந்த வீட்டின் கூரை மெட்ராஸ் டெரஸ் பாணியில் அமைந்த ஒன்று. எனவே, காலப்போக்கில் அந்த கூரைக்கு குறுக்கே வேய்ந்த மரங்கள் வீறிட, மழைக்கு சில சமயங்களில் அந்த வீடு சிற்சில இடங்களில் ஒழுகியது. ஆகினும், வடிவேலு சொல்வதை மாற்றி சொல்வது போல் – basement strong , building weak என அந்த வீடு இருந்தது. அதன் சுவர்கள் தடித்தவை. அந்த காலத்து செங்கல்களும் இன்றைய அளவில் இல்லாது வடிவத்தில் மிகுந்து பெருத்தவை.

மழைக் கால அவதிகள் பலவற்றின் ஊடும், அம்மாவுக்கு அந்த வீட்டை விட மனசில்லை. இடித்துக் கட்டவும் இட்டமில்லை. ஒண்டிக் குடித்தனத்தில், அந்த வீட்டில் தான் அவளது கனவுகள், அவளது அடுத்த இரண்டு பிள்ளைகள் ( நான் உட்பட ) பிறந்தது என பல காரணங்கள். மேலும், அவளது தந்தை (எனது தாய் வழி தாத்தா) பெரிதும் கட்டிட உதவி செய்து கட்டப்பட்ட வீடு அது.

நினைவுகளுக்கு வயதில்லை. வைத்துக் கொடுக்கவோ, வாங்கிக் கொள்ளவோ காசும் இல்லை. தாத்தா அந்த வீடு கட்டப்பட்ட நாளில் வேலி திருட வந்தவனை துரத்தி இருக்கிறார். பாட்டி / தாத்தாவின் 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தி நிகழ்ந்ததும் அந்த ஒடுக்கு வீட்டில்….இப்படி பற்பல காரணங்கள். எனவே, 1990 வாக்கில், அந்த வீட்டின் மேல் மாடி வீடு கட்டும் ஆசை அவளுக்கு பெரும் கனவாக இருந்தது. அவளது வாக்கில், அது அவளது “ராஜத்தின் மனோரதம்”.

மேல் தளத்தின் கூரை கீழ் தளம் போல் madras terrace இல்லை. முழுதும் இன்று போன்றே, concrete அமைப்பால் ஆனது. 1960களில் madras terrace போட்டு கட்டும் வீடுகளில், கூரை முடியும் போது “கண்டிக் கல்” பொருத்துதல் என்பது ஒரு பெரும் நிகழ்வு. பொருத்தப்படும் தினத்தில் வீடு ஒரு ஆன்மா பெறுகிறது என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அதனாலே, அறுபதுகளில், கண்டிக் கல் பொருத்தும் முன்பாக, ஒரு சின்ன துவாரத்தின் வழி ஒரு கற்பூரத்தை மேஸ்திரி கூரை மேல் நின்று கீழே தரையில் விடுவார். பிறகு, அந்த கல் பொருத்தியவுடன் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும், மேலும் கட்டிட தொழிலாளர்களுக்கு உணவிடுதல் வேண்டும் எனும் வழக்கம் இருந்தது.

மனிதன் சடங்குகள், நம்பிக்கைகளால் நிறைந்தவன். என்னதான் இந்த 1991ல் கட்டப்பட்ட மேற்கூரை காங்க்ரீட் உபயோகித்து கம்பிகளால் கட்டப்பட்ட போதும், முன்பு போலவே சடங்குகளை செய்ய வேண்டும் என்பது அம்மாவின் அவா. முக்கியமாக அந்த உணவளித்தல்.

அதன் படி, நல்ல தேதியை முதலில் கணித்து, மேஸ்திரியிடம் அந்த தேதியில் கூரை வேலையை முடிக்கச் சொல்லி, அதன் பிறகு கட்டிட தொழிலாளர் அனைவருக்கும் அன்று விருந்து என அறிவித்தோம்.

பெருங்களத்தூரில் அன்றைய தேதியில் விருந்து என்பதை ஓட்டலில் வாங்க முடியாது. வாங்குவதற்கு முதலில் உணவு விடுதிகள் இல்லை. மேலும், அம்மாவுக்கு பழக்கமும் இல்லை. எனவே, அவற்றை வீட்டில் தான் செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட நாளன்று, அம்மா ஒன்றுக்கு நாலாய் அடுப்பு மற்றும் gas cylinder வைத்து அரிசி, வடை, துவையல், குழம்பு, ரசம், பச்சடி, பாயாசம், சித்திரான்னங்கள், என சைவ உணவுகளை சம்பிரதாயம் வழுவாமல் செய்து அமர்க்களப் படுத்தி விட்டாள்.

மதியம் சற்றேறக்குறைய 12:30 மணிக்கு கூரை வேலை முடித்து, குளித்து, உடம்புக்கு எண்ணை (கட்டிட வேலை தரும் வெள்ளை சருமத்தை மறைக்க) தடவி, ஒவ்வொரு தொழிலாளராக பந்திக்கு வந்து அமர அப்பா, நான், எனது சகோதரர்கள் என பரிமாற துவங்கினோம்.

மொத்தமாக 20 தொழிலாளர் இருந்தனர். சிலர், தங்கள் மனைவி, குழந்தைகளை அன்று காலையே அழைத்து வந்திருந்தனர். பார்க்க நிறைவாக இருந்தது.

அவர்களின் சாப்பாடு துவங்கியது..

பசி! அதன் பற்பல பரிமாணங்கள் குறித்து பிற்காலத்தில் ராஜு முருகன் “வட்டியும் முதலும்” எனும் புத்தகத்தில் துவக்கத்தில் விரிவாக எழுதி இருப்பார். வேளாண்மை செய்து வீடு வருவோர் பசி குறித்து நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரையில் எழுதி இருப்பார்.

அந்த 1991ல் அந்த நாள், அன்று தான் நாங்கள் “பசி” எனும் தத்துவத்தை, தன் பசி அல்லாது பிறர் பசியை, அதன் முழு வடிவத்தை முழுதாக பார்த்தோம்.

வந்தவர் 20 பேர். ஆனால், அவர்களின் பசி அசாத்தியமாக இருந்தது. கல்யாண பந்தியில் பரிமாறுவது போல் நாங்கள் பரிமாற, அவர்கள் சாப்பிட்ட விதம் வேறு வகையில் இருந்தது. அம்மா வழக்கமாக குடும்பத்தார்க்கு சமைப்பது போல் , இல்லத்தே சாப்பிடுவோர் சாப்பிடும் அளவுக்கு ஏற்றவாறு உண்டிகளை செய்திருந்தாள். அவர்கள் சாப்பிடும் அளவோ அதற்கு ஐந்து முதல் ஆறு மடங்கு இருந்தது.

குறிப்பாக, கடும் வேலை செய்து சாப்பிடுபவனுக்கு இருக்கும் வேகம்…

சோறு விரைவில் அறவே தீர்ந்து போனது. ஆனால், அவர்களுக்கு பசி போகவில்லை.

அப்பா பல்லை கடித்தார். அம்மா பதற ஆரம்பித்தாள். மிகப் பெரும் சோகம், சுமை அவளை கவ்விக் கொண்டது. “உறு பசியும், ஓவாப் பிணியும்” என எல்லார் முன்பும் வள்ளுவர் தாண்டவம் ஆடினார்.

அவர்கள் இலையின் முன் காத்திருந்தனர். பசியோடு.

அம்மா, அருகில் இருக்கும் வீடுகளில் இருந்து கிடைக்கும் pressure குக்கர் வாங்கி வா என்றாள். ஓடினேன். அவர்களிடம் வீட்டில் நடக்கும் நிகழ்வை விவரித்தேன். அனைவரும் உதவினர். 4 அல்லது 5 தேறியது. பல தரத்தில், பல அளவில், பல நிறுவனத்தாரின் குக்கர்களாக அவை இருந்தன.

அம்மா சோறு களைந்து குக்கர்களை வைத்தாள். இருப்பினும் அவை whistle வந்து, pressure குறைந்து, சோறு எடுக்க நேரம் ஆகியது.

அவர்கள் இலையின் முன் காத்திருந்தனர். அமைதியோடு.

அந்த தொழிலாளருக்கு, காய்கறிகளின் மீது அவ்வளவாக பற்றில்லை. அவர்களின் பிரதான உணவு அசைவமாக இருக்கலாம். தெரியாது. எனவே சில கூட்டு, காய்கறிகள் தேவைக்கும் அதிகமாகவே பாத்திரத்தில் மீதம் இருந்தன. எனவே , புதிய சோறு வரும் வரை பசிக்கு உதவியாக இருக்கும் என, இருந்த வெறும் கூட்டு, காய்கறி வகைகளை பரிமாற ஆரம்பித்தார் அப்பா. அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும். அண்ணன்மாரோ, வடிவேலு போல் “இதுக்கு தான் முன்னாடியே பிளான் பண்ணனும்” என்று புலம்பலில்…

ஆனால்… பந்தியில் அமர்ந்தவர்களின் பெருந்தேவை அந்த நேரத்தில் சோறு.

அவர்கள் இலையின் முன் காத்திருந்தனர். அதே பசியோடு. அதே அமைதியோடு.

குக்கர்கள் பெருமூச்சு விட்டன, திறக்க வந்த பாடில்லை. அம்மாவால் முடியவில்லை. விசும்ப தொடங்கினாள். எனக்கு அவர்கள் பசியை விட, அம்மாவின் நிலை மிக வருத்தம் அளித்தது.

ஒரு உபாயம் தோன்றியது.

முன்பு போலவே அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சென்று, பாகம்-2ல் நடந்ததை சொல்லி, இம்முறை அவர்கள் வீட்டில் சோறு இருந்தால் வாங்கி வந்தால் என்ன என தோன்றியது.

அம்மா என்னை அணைத்துக் கொண்டாள். சுந்தர காண்டம் பிணி வீட்டுப் படலத்தில் கம்பன் எழுதி இருப்பான் — பெண்கள் கட்டியிருந்த மங்கல நாண் தவிர பிற எல்லாக் கயிறுகளாலும் அனுமன் கட்டப்பட்டான் என (“பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த”)…அது போல் அம்மா “அவர்கட்கு போக இருக்கும் அனைத்தையும் வாங்கி வா” என்றாள்.

ஓடினேன். உண்மையாகவே சிவாஜியின் வசனம் போல் “ஓடினேன், ஓடினேன், தெருவெங்கும் ஓடினேன்”. தூக்கக் கூடிய அளவில் இருந்த முறம், பிரம்புக் கூடை, என அனைத்தையும் தூக்கிக் கொண்டு ஓடினேன்.

சைவம் / அசைவம் என பார்க்காது இம்முறை தெரு எங்கும் ஓடினேன். ஒவ்வொரு வீட்டிலும் அதே டயலாக், அதே ஆக்க்ஷன்…

சுருக்கமாக சொல்வதெனில், நிஜமாகவே பிச்சை எடுத்தேன் ! நிதர்சனமான, வேத வழியில் ஒவ்வொரு பிராமணனுக்கும் விதிக்கப்பட்ட “பவதி பிட்சாம் தேஹி” !

மாது வந்திருக்கேன் நாகேஷ் / கே. பி பார்த்திருந்தால் என்னை புக் செய்திருப்பார்கள்.

அக்கம்பக்கத்தாரிடம் தற்போதைய நிலையை சொன்னேன். எங்களது பதற்றம் அவர்களையும் தொற்றியது. அப்போது நேரம் மதியம் 1:30 கடந்திருந்தது. பகல் உணவு பல வீடுகளில் முடிந்திருந்தது.

சிலர் இருந்த சோற்றை கொடுத்தனர். சிலர் வீடுகளில், சாப்பிட்டு ஒழித்து போட்டு பாத்திரங்கள் முற்றத்தில் இருந்தன.

மேலும்…மறக்க வேண்டாம்…அவர்கள் குக்கர்கள் எனது வீட்டில் ..

சிலர் “அடுப்பு வைக்கவா?” என்றார்கள். வேண்டாம், அது பிடிக்கும் நேரம் வரை தாங்காது என சொல்லி கிடைத்தவற்றை வைத்து வீடு வந்தேன்.

அவர்கள் இலையின் முன் காத்திருந்தனர்.

நல்ல வேளை, இதற்குள், அம்மா வைத்த குக்கர் பலவும் திறக்க வந்திருந்தன. ஒரு வழியாக வெந்த சோறு, “வந்த” சோறு என எல்லா சோற்றையும் சேர்த்து, அந்த தொழிலாளருக்கு பந்தி முடித்தோம். நெகிழ்வாக எழுந்தனர். அப்பா பெருமூச்சு விட்டார்.

அந்த தொழிலாளர் சாப்பிட்ட பிறகு நாங்கள் சாப்பிடுவது என்பது அன்றைய விதி. ஆனால், நாங்கள் யாரும் சாப்பிடும் நிலையிலேயே இல்லை.

பெரும் சுமை, பெரும் பிழையினின்று மயிரிழையில் தப்பித்தோம். இன்று நினைத்தாலும் குலை நடுங்குகின்றது.

அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகும் அம்மாவுக்கு இருப்பே கொள்ளவில்லை. என்ன இருந்தாலும், இது பெரும் இழுக்கு, ஒரு பெருங்குறை என சொல்லிக் கொண்டே இருந்தாள். மறுபடியும் அவர்களை கூப்பிட்டு வந்து விருந்து கொடுத்து, போதிய சன்மானமும் கொடுத்து அனுப்ப வேண்டும் என ஆவல் இருந்தது.

அதன் வழியே நடந்தது. அவர்களின் பசி முன்னமே அறிந்திருந்தமையால், திட்டமாக செயல்பட்டு, வேறொரு நாள் அவர்களை அழைத்து , திணறாமல் திகைக்காமல் உணவளித்தோம். முதல் முறை வந்த அனைவரும் இரண்டாம் முறையும் வந்திருந்தது மனதின் சுமையை முழுதும் நீக்கியது.

மணிமேகலை பேசுகிறது பசியைப் பற்றி — “குடிப் பிறப்பழிக்கும் விழுப்பம் கொல்லும் என”. அதே மணிமேகலை “மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே” என விளம்புகின்றது.

அன்று செய்த அச்செயல் அதற்கு சான்று.

வீடு பூச்சு முடிக்கப் பெற்று, வண்ணம் பூசி, பூரா கட்டிட வேலையும் முடிந்த காலை அம்மா “கிரஹ ப்ரவேசம்” என்று இழுத்தாள். அப்பா உறுமினார். அண்ணன்கள் escape என்றனர். எனக்கு உதறியது, இந்த முறை என்னவோ என ..

இருப்பினும்…வழக்கம் போல் நான் மாட்டிக் கொண்டேன்.

வெறுமனே சொன்னா போதும்டா, மற்றதை நான் பாத்துக்கறேன்…ப்ளீஸ் ?…இழுத்தாள்..

என்னம்மா, இந்த தடவை என்ன அக்கம்பக்கம் மட்டுமா, அல்லது அக்கம்பக்கம், சுற்றம், நட்பு என விரிந்த விருந்தோம்பலா ?

முதலில் அக்கம்பக்கம் மட்டும் தான்டா. அவா எல்லோரும் அன்னிக்கி அவ்வளவு செய்யாட்டி நாம என்ன ஆயிருப்போம். அதுக்கு ஒரு நன்றிக்கடனாக , நெறியாக இதை முதலில் அவாளுக்கு செய்யணும். அப்புறம்தான் உறவு எல்லாம்.

(சலிப்புடன்..) அப்போ இன்னும் ஒண்ணு இல்லை, இரண்டு ரவுண்ட்ஸ் இருக்கு ?

ஆமாம். உறவுனு வரும் போது நான் பாத்துக்கறேன்டா. அக்கம் பக்கம் இருக்கறவா first.. எல்லாரையும் உனக்குத் தான் ஏற்கனவே நன்னா தெரியுமே (!), நீயே கூப்பிடேன் ?

(வடிவேலு கணக்காய் ) ஆஹா… சொப்பா… ஒரு doubt, கேட்டா கோவிக்க மாட்டியே ?

சொல்லு ..

அன்னிக்கு வந்தவாளுக்கு சோறு பத்தலை, சோறு வேணும்னு அக்கம்பக்கம் திருவோடு தாங்கி போனேன். இன்னிக்கி அதே அக்கம்பக்கத்தை சாப்பிட கூப்பிடறோம்…

ஆமாம்….என்ன அதுக்கு ? (“அது நடந்து முடிந்த கதை” எனும் திருவிளையாடல் சிவாஜி இறுமாப்பு முகத்தில்)

அப்படி கூப்பிடும் போது இவாளுக்கு இன்னின்ன பசி இருக்கும், இன்னின்ன அளவு வேணும்னு தெரிஞ்சு செஞ்சுடுவியா ?

அது தான் இரண்டாவது தடவையே அந்த அனுபவம் வந்துடுத்தே, புதுசா என்ன ? எல்லாம் சமாளிச்சுடுவேன்..

இப்போ எல்லாம் பேசு… நடுவாந்திரமா சோறு பத்தலைனு நீ சொன்னா, நான் எங்கேன்னு ஓடறது ? அவா வீட்டுக்கே போய் நிக்க முடியாது…என் சிரமம் எனக்கு… விளங்குதா ?

சிரித்தாள்…

இன்றளவும்…

– கணேஷ் வெங்கிட்டு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.