இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு எதிராக அவதுாறு கூறும் நபர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஊடகங்களை கட்டுப்படுத்த இம்ரான் கான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சமீபத்தில் பாக். தகவல் தொடர்பு துறை அமைச்சர் முராத் சயீது குறித்து அவதுாறு கூறிய பிரபல பத்திரிகையாளர் மோசின் பைக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இங்கு ஊடகங்களை ஒழுங்குபடுத்தவும் அவதுாறு பேசுவோரை ஒடுக்கவும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி 2016ம் ஆண்டின் மின்னணு குற்றங்கள் தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு அவசர சட்டமாக நேற்று அமலுக்கு வந்தது. இதன் அரசாணையை அதிபர் ஆரிப் அல்வி வெளியிட்டார்.திருத்தப்பட்ட சட்டத்தின்படி ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு எதிராக அவதுாறு கூறும் நபர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சட்டப்படி தனி நபர் குறித்து இணையதளங்களில் அவதுாறான பதிவுகளை வெளியிட்டால் அது ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு பெரிய குற்றமாக கருதப்படும்.இதில் பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரின் பிரதிநிதி வந்து புகார் அளித்தால் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement