உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பாஜக.வுக்கு ஆதரவாக அகில இந்திய சாதுக்கள் சபை (அகில பாரதிய அஹடா பரிஷத்) பிரச்சாரம் செய்கிறது.
இந்து மதத்தின் சாதுக்கள் எனப்படும் துறவிகளின் சபை உ.பி.யில் அதிகம். இவர்களுக்கு பல லட்சம் எண்ணிக்கையில் பக்தர்கள் உண்டு. வட மாநிலங் களில் அதிகமுள்ள அனைத்து சாதுக்கள் சபைக்கான தலைமை சபை உ.பி.யின் அலகாபாத்தில் செயல்படுகிறது. அகில இந்திய சாதுக்கள் சபை எனும் பெய ருடைய இதன் புதிய தலைவராக மஹந்த் ரவீந்திராபுரி கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்வு செய்யப்பட்டார். முக்கிய சாதுக்கள் சபையில் ஒன்றான நிரஞ்சனி அஹடாவின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார். இவரது சார்பில் அனைத்து அஹடாக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்கு உ.பி. தேர்தலில் பாஜக வெற்றிக்காக நடவ டிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் ‘‘உ.பி. ஆட்சி மீண்டும் துறவிகள் கைகளில் ஒப்படைக் கப்பட வேண்டும். இதற்காக பாஜக வெற்றி பெற நாம் அனைவரும் பிரச்சாரம் செய்ய வேண்டும். பொதுமக்களை சாதுக்கள் நேரில் சந்தித்து பாஜக.வுக்காக வாக்கு சேகரிக்க வேண்டும். சாதுக்களின் முதல்வராக மீண்டும் ஆதித்யநாத் தொடர அனைவரும் பாடுபடுவது அவசியம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அலகாபாத்தில் நடைபெற்று வரும் மகர மேளாவில் அகில இந்திய சாதுக்கள் சபை கூட்டமும் நடைபெற்றது. இதில், பாஜக.வுக்கு ஆதரவான முடிவை எடுத்தனர். கடந்த அக்டோபரில் சாதுக்கள் தலைமை சபைக்கு புதிய தலைவராக தேர்வான போதே மஹந்த் ரவீந்திராபுரி தனது ஆதரவை பாஜக.வுக்கு அளித்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அடுத்து உ.பி. சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கான பொது தேர்தலில் பாஜக வெற்றிக்காகப் பாடுபடுவேன்’’ என்று உறுதி அளித்திருந்தார்.
ரவீந்திராபுரியின் அறிவுறுத் தலை தொடர்ந்து பல்வேறு சாதுக்கள் சபையின் சார்பில், உ.பி.யில் தீவிர பிரச்சாரம் தொடங்கி நடைபெறுகிறது. இவர்கள் தனியாக சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதன் மூலமாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்காக இளம் சாதுக்களில் இணையதள கல்வி பெற்ற 100 பேர் பாஜக பிரச்சாரத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 36 இளம் துறவிகள் மூலம் பாஜக ஆதரவு பிரச்சாரத்துக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த இணைப்பில் பேசும் பொதுமக்களிடம் இந்துக்களின் கலாச்சாரம் நிலைக்கவும் இந்து ராஜ்ஜியம் அமைக்கவும் பாஜக.வுக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிகிறது.
இதற்கிடையில் அயோத்தி யிலும் பாஜக.வுக்கு ஆதரவாக பல சாதுக்கள் வீடுதோறும் நேரில் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில், ராமஜென்ம பூமி கோயில் அறக்கட்டளை மற்றும் பாஜக தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தின் சார்பிலும் பலர் இடம்பெற்றுள்ளனர். உ.பி.யின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் பாக்கி உள்ள 4 கட்ட தேர்தலில் இந்துக்களின் வாக்குகள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.