அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவைன் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு
ரஷ்யா
தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
அதன் தொடர்சியாக, நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. மேலும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்தார், ஆனால், உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, ரஷ்ய படைகள் சிலவற்றை பாசறைக்கு திரும்புமாறு அந்நாட்டு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. இதனால், போர் பதற்றம் தணிந்த நிலையில், எல்லையில் ரஷ்ய படைகள் இன்னும் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
மேலும், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை நேரில் சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதேசமயம், உக்ரைன் விவகராத்தில் இந்தியா யாருக்கு ஆதரவளிக்கும் என்ற கேள்விகளும் பரவலாக எழுந்தன. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்
ராஜ்நாத் சிங்
, அமெரிக்க அதிபர், ரஷிய அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தனது சார்பாக சில முயற்சிகளை எடுத்துள்ளார். எந்த வகையிலும் அமைதியை மட்டுமே நிலைநாட்ட இந்தியா விரும்புகிறது. பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் எப்படியும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா அமைதியை மட்டுமே விரும்புகிறது. நாங்கள் எப்போதும் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம் என்றும் ராஜ்நாத் சிங் அப்போது கருத்து தெரிவித்தார். முன்னதாக, உக்ரைனில் இருந்து இந்தியர்களை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது கவனிக்கத்தக்கது.