‘கோட்சேவின் சித்தாந்த பேத்தி’ வெற்றி: சென்னையில் கால் பதித்த பா.ஜ.க

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றுள்ளன. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 178 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 2036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கோட்சேவின் ஆதரவாளராக கருதப்படும் உமா ஆனந்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது கவனிக்கத்தக்கது.

திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,பாஜக சார்பில் ஒற்றை ஆளாக வெற்றிபெற்றதுள்ளது தொடர்பாக உமா ஆனந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வாஜ்பாய், அத்வானி மக்களவையில் எப்படி தொடங்கினார்கள்? இன்று எப்படி இருக்கிறோம். சிங்கம் சிங்கிளாகத் தான் வரும் என தெரிவித்தார்.

முன்பு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த உமா ஆனந்தன், தன்னை கோட்சேவின் சித்தாந்த பேத்தி என்றும், கோட்சேவின் ஆதரவாளர் என்றும் கூறியிருந்தார்.

உமா ஆனந்தன் கோட்சே குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான பிறகு, அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தது தொடர்பாக பலரும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, பாஜக தனியாக போட்டியிட்டு, சென்னை மாநகராட்சியில் கால் பதிப்பது இதுவே முதல்முறையாகும்.

இதற்கிடையில், உமா ஆனந்தன் வெற்றி குறித்து ட்வீட் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன், ” வெறுப்பு வெறியர் வார்டில் வெற்றிபெற்றது அவமானம். காங்கிரஸ் ஆகிய நாம், தேசத் தந்தையின் மதிப்புகளுக்காகப் போராடாமல், தேசத்திற்கான நமது கடமையைச் செய்யத் தவறியதை நினைத்து நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன். இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்ந்து சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாவது, “இந்த முடிவு ஏமாற்றமளிக்கிறது. தேசத்தந்தையின் நினைவை அவமதிக்கும் செயலாகும்.இது தமிழ்நாடு காங்கிரஸூக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இதற்கு நாம் அனைவரும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் “பொறுப்பாளர்கள்” தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.