550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்!

550 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மலையாள நடிகை KPAC லலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு மறைந்தார். அவருக்கு வயது 74. தன்னுடைய ஆரம்ப காலங்களில் நாடங்களில் நடித்தார் லலிதா. அவர் பணிபுரிந்த கேரளா இடதுசாரி நாடக நிறுவனத்தின் பெயர் KPAC என்பதே பின்னாளில் அவர் பெயரின் முன்னொட்டாக மாறிப்போனது. தன்னுடைய வெள்ளந்தியான பாவனை, நகைச்சுவை நடிப்பின் வழியாகத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்.

“நான் கதாநாயகி போல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. வெவ்வேறு பாத்திரங்களில் நடித்து மக்களைச் சிரிக்க வைத்தாலேபோதும். அந்த மகிழ்ச்சிக்கு எந்த விருதும் இணையில்லை” என்று ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டுள்ள லலிதா இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, 4 முறை மாநில அரசின் கலை விருதுகள் என வாங்கி குவித்தவர். கேரள சங்கீத நாடக அகாதமியிலும் பொறுப்பில் இருந்தவர்.

சமீபத்தில் வெளியான துல்கரின் வரனே அவஸ்யமுண்டு படத்தில் சீரியல் ஆக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தமிழ் படங்களுக்கும் அவருக்கும் நீண்டகால உறவு உண்டு. ‘காதலுக்கு மரியாதை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அலைபாயுதே’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனங்களிலும் இடம்பிடித்தவர். இவரது கணவர் இயக்குநர் பரதன். 1998 இல் மறைந்த இவர், தேவர் மகன் படத்தின் இயக்குநர். சித்தார்த் என்கிற மகன், ஸ்ரீகுட்டி என்கிற மகள் இவருக்கு உள்ளனர். கேரளாவில் அரசு மரியாதையோடு இறுதி சடங்குகள் நடக்கவுள்ள நிலையில் மலையாள, தமிழ் திரையுலகினர் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.