ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா.
உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேபாள அரசும் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் நாடு திரும்பும்படி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து நேபாள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் வசிக்கும் நேபாள மக்கள் அங்குள்ள தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அங்கு தங்க வேண்டியிருந்தால் தவிர மற்றவர்கள் கிடைக்கக்கூடிய வணிக விமானங்களைப் பயன்படுத்தி நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேவைப்பட்டால் உக்ரைனுக்கு செல்லும் திட்டத்தை முற்றிலுமாக நேபாள மக்கள் ஒத்திவைக்க வேண்டும். 38-க்கும் மேற்பட்ட நேபாள குடிமக்கள் பேர்லினில் உள்ள நேபாள தூதரகத்துடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படியுங்கள்..
போர் மூளும் அபாயம்: நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்தது உக்ரைன்