வலிமையை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் – ஹூமா குரேஷி

வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள வலிமை படம் நாளை (பிப்.,24ல்) ரிலீஸாகிறது. அதிரடி ஆக் ஷன் காட்சிகளுடன், அம்மா, சகோதர சென்டிமென்ட் காட்சிகளுடன் உருவாகி உள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாவதால் ரசிகர்களும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஞாயிறு வரை தமிழகத்தில் அநேக தியேட்டர்களில் இந்த படத்திற்கு நல்ல புக்கிங் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அற்புதமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஹூமா குரேஷி. இவர் கூறும்போது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வினோத் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார்.

ஒவ்வொரு முறையும், நாங்கள் ஆக்சன் பிளாக்குகள் என்றாலே, நான் உற்சாகமாக இருப்பேன். பொதுவாக, ஒரு ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே அதில் நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும், ஆனால் வினோத் பெண் கதாபாத்திரங்களைத் கணம் மிகுந்த பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். குறிப்பாக, எனது பாத்திரம் திரையில் நிறைய இடத்தைப் பெற்றிருப்பதைக் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது.

அஜித் பற்றி கூறுகையில், முன்னதாக “பில்லா 2 படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தை தந்தது. வலிமை படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன், எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்றார்.

போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன, மேலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் மற்றும் விஷுவல் ப்ரோமோக்களில் மனதைக் கவரும் அதிரடி காட்சிகள் வலிமை மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.