3 மாதங்களுக்கு பிறகு உயர காத்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை – எப்போது தெரியுமா?

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நாட்டில் உயராமல் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் கிட்டத்தட்ட 100 டாலர்கள் அளவுக்கு தற்போது விற்பனையாகும் நிலையில், சட்டசபை தேர்தல்கள் முடிந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கும் என கருதப்படும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் தவிர்க்க முடியாது எனக் கூறப்படுகிறது.
image
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், மத்திய அரசு வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. அதைத்தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீது தாங்கள் விதிக்கும் வரியையும் மட்டுப்படுத்தின. அதன் பிறகு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. குறிப்பாக, 110 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதே அளவில் நீடிக்கிறது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாகவே, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதாகவும், அதற்கு பிறகு, அதாவது மார்ச் 7-ம் தேதிக்கு பிறகு இதன் விலை கணிசமாக உயர்த்தப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
image
ஏற்கனவே, விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை கடந்த 1-ம் தேதி அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தற்போது 96 டாலர். ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் இது 150 டாலர் வரை அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. உலகச் சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 8 சதவீதம் ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவில் இருந்தே எரிவாயுவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அப்படி இருக்க, போர் நேரிட்டு இந்த விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்துவிடும். இதனால் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.