'சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல': திக பொதுச்செயலாளர் துரைசந்திரசேகர்

கடலூர்: மன்னர்கள் கட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்யக் கோரி சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் துரைசந்திரசேகர் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில்(கனகசபை) ஏற சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை தீட்சிதர்கள் தாக்கி சாதிப் பெயரைச் கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்யக் கோரியும், நடராஜர் கோயிலை தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் திராவிடர் கழகம் சார்பில் சிதம்பரத்தில் இன்று(பிப்.24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் காந்தி சிலை அருகில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் பூசிஇளங்கோவன் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக பொது செயலாளர் துரைசந்திரசேகரன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், சிதம்பரம் முன்னாள் நகர் மன்ற தலைவர் சந்திரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொது செயலாளர் வன்னியஅரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, தஞ்சை விறிசி சாமியர் முருகன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பெண் மீது தாக்குதல் நடத்திய தீட்சிதர்களை கைது செய்யக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் கூறியதாவது:

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கோயிலுக்கு பூஜை செய்ய வந்தவர்கள்தான். மன்னர்கள் கட்டிய கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல. கோயில் மக்களுக்கானது. பக்தர்களுக்கானது. தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களை கைது செய்ய வேண்டும். நந்தனார் நுழைந்த தெற்கு கோபுர வாயில் தீண்டாமைச்சுவராக உள்ளது. அதை அகற்ற வேண்டும். தமிழக அரசு கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு சந்திரசேகரன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.