புதுடில்லி:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவிட்ட நிலையில், இந்திய பங்குச் சந்தைகள், கடுமையான சரிவை கண்டன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்தது. கச்சா எண்ணெய் விலை வரலாற்று உச்சத்துக்கு சென்றது.
செக்க சிவந்த சென்செக்ஸ்: ரஷ்யா – உக்ரைன் இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவைக் கண்டன. நேற்று வர்த்தகத்தின் துவக்கத்திலேயே, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீட்டு எண் 2,700 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை சந்தித்தது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும் 815 புள்ளி கள் சரிவைக் கண்டது.இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமின்றி, ஐரோப்பிய, ஆசிய சந்தைகளும் 4 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டன. இந்திய சந்தையில், பங்குகளை விற்கும் போக்கு, முதலீட்டாளர்களிடம் அதிகரித்து உள்ளது.
மேலும், அன்னிய முதலீட்டாளர்களும் தொடர்ந்து தங்கள் பங்குச் சந்தை முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர்.தற்போதைய நிலவரப்படி, சந்தை மேலும் 8 முதல் 10 சதவீதம் வரை சரிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.கசக்கும் கச்சா எண்ணெய்:’பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஒரு பீப்பாய் 105 டாலரை தாண்டியது. அதாவது கிட்டத்தட்ட 7,950 ரூபாய்க்கும் அதிகமாக எகிறி உள்ளது. இது, கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகான உச்சபட்ச விலையாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வுக்காக காத்திருந்த எண்ணெய் வள நாடுகள், இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என கருதப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மவுசு குறைந்த ரூபாய்: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, நேற்று துவக்கத்தில் 75.02 ரூபாயாக இருந்தது. அதன் பின் மளமளவென சரிவைக் கண்டது. முந்தைய நாள் முடிவில் 74.61 ரூபாயாக இருந்தது; நேற்று முடிவில் 102 காசுகள் சரிந்து 75.63 ரூபாயாக இருந்தது.
Advertisement